பொதுசிவில் சட்டம் பற்றி பிரதமர் கருத்து - வைகோ கண்டனம்


பொதுசிவில் சட்டம் பற்றி பிரதமர் கருத்து - வைகோ கண்டனம்
x

மத்திய அரசு பொது சிவில் சட்டத்தைச் செயற்படுத்த துடிப்பது கடும் கண்டனத்திற்கு உரியது என்று வைகோ கூறியுள்ளார்.

சென்னை,

மத்திய அரசு பொது சிவில் சட்டத்தைச் செயற்படுத்த துடிப்பது கடும் கண்டனத்திற்கு உரியது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2018 ஆம் ஆண்டு, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையிலான 21ஆவது சட்ட ஆணையம் ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், நாட்டில் பொது சிவில் சட்டம் அவசியம் இல்லை. தற்போதைய சூழலில் அது விரும்பத்தக்கதும் அல்ல என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 185 பக்கங்கள் கொண்ட அந்த ஆலோசனை அறிக்கையில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் நாட்டில் நிலவும் பன்முகத்தன்மைக்கு மதச்சார்பின்மை முரண்பட முடியாது. நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மை என்பதை பொது சிவில் சட்டம் மூலம் சமரசம் செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் அது தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஆகிவிடும் என்று தெரிவித்திருந்தது. இருப்பினும் திருமணம், விவாகரத்து தொடர்பான சட்டங்கள் சிலவற்றை பொதுவானதாக பல்வேறு மதங்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் 22 ஆவது சட்ட ஆணையம் ஜூன்-14, 2023 அன்று வெளியிட்ட அறிவிப்பில், பொது சிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்கள், மத அமைப்புகள் கருத்துகள் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் பொது சிவில் சட்டம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று ஜூன்-27 ஆம் தேதி, மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் பாஜக வாக்குச்சாவடி உறுப்பினர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

"ஒரே குடும்பத்துக்கு இரண்டு வெவ்வேறு விதமான சட்டத்திட்டங்கள் எப்படிப் பொருந்தும்? அதேபோல் ஒரு தேசம் இரண்டுவிதமான சட்டங்களைக் கொண்டு இயங்க முடியாது" என்று பொது சிவில் சட்டத்தை வலியுறுத்தி பேசி உள்ளார். உச்சநீதிமன்றமும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த கூறியுள்ள நிலையில், பொது சிவில் சட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என அழைப்பு விடுத்திருக்கிறார் பிரதமர் மோடி.

நாட்டின் பன்முக தன்மையை சீர்குலைத்து வரும் ஒன்றிய பாஜக அரசு, மணிப்பூர் பற்றி எரிவதைப் பற்றிக் கவலைப்படாமல், பொது சிவில் சட்டத்தைச் செயற்படுத்த துடிப்பது கடும் கண்டனத்திற்கு உரியது ஆகும். இந்த முயற்சியை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story