கோவை விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.52 லட்சம் நிவாரணம் கிடைக்க வாய்ப்பு - மாவட்ட நிர்வாகம் தகவல்


கோவை விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.52 லட்சம் நிவாரணம் கிடைக்க வாய்ப்பு - மாவட்ட நிர்வாகம் தகவல்
x

சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.52 லட்சம் நிவாரணம் கிடைக்க வாய்ப்புள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவை,

கோவையை அடுத்த குனியமுத்தூர் சுகுணாபுரம் பகுதியில் உள்ள கிருஷ்ணா கல்லூரி வளாகத்தின் விடுதி அருகே கருங்கற்களால் ஆன பழைய சுற்றுச்சுவரின் அருகே புதிய கான்கிரீட் சுவர் அமைக்கும் பணி சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதற்கான கட்டுமான பணியில் ஆந்திராவை சேர்ந்த 3 பேர், மேற்கு வங்காளத்தை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 5 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணி அளவில் கருங்கல்லால் ஆன பழைய சுற்றுச்சுவரின் அஸ்திவாரம் வலுவிழந்து 100 அடி நீளத்துக்கு பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கொல்லி ஜெகநாதன் (வயது 53), நக்கிலா சத்யம் (48), ரப்பாகா கண்ணையா (49), மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிஸ்கோஷ் (40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டனர்.

மேலும் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த பருன் கோஸ் (35) என்பவர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி கல்லூரி நிர்வாகமும், ஒப்பந்ததாரரும் இணைந்து தலா ஒருவருக்கு 15 லட்சம் ரூபாயும், கட்டுமான நல வாரியம் சார்பாக தலா 5 லட்சம் ரூபாயும், காப்பீட்டுத் தொகை தலா 32 லட்சம் ரூபாயும் என மொத்தம் 52 லட்சம் நிவாரணம் கிடைக்க வாய்ப்புள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் கல்லூரி நிர்வாகம் சார்பில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களில் யாருக்கும் கல்வி உதவி தேவைப்பட்டால் அதை செய்யத் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் விமானம் மூலமாக அவர்களின் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




Next Story