பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா


பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா
x

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற பூக்குழி திருவிழாவில் 15 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற பூக்குழி திருவிழாவில் 15 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.

பெரிய மாரியம்மன் கோவில்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் அமாவாசை அன்று பூக்குழி திருவிழா நடைபெறும். அதேபோல இந்த ஆண்டு கடந்த 10-ந் தேதியன்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் அம்மன் வீதி உலா நடந்தது.

12-வது நாளான நேற்று அதிகாலை பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அதன் பிறகு கோவில் முன்பு உள்ள தீக்குண்டத்தில் பூஜை செய்து தீ வளர்க்கப்பட்டது.

தீ மிதித்தனர்

12 நாட்களாக விரதம் இருந்த பக்தர்கள், குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள் ஆகியோர் மஞ்சள் ஆடை அணிந்து காப்பு கட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் நகரை சுற்றி வந்தனர்.

பின்னர் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். விழாவில் பக்தர்கள் கலந்து கொள்வதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பூக்குழி திருவிழாவை ஒட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. சமூக சேவை நிறுவனங்கள், நகராட்சி, அரசியல் கட்சியினர் சார்பில் தண்ணீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.

தி.மு.க. சார்பில் நகர்மன்ற சேர்மன் தங்கம் ரவி கண்ணன், ஒன்றிய செயலாளர் மல்லி ஆறுமுகம் ஆகியோரது தலைமையில் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. அதேபோல அ.தி.மு.க. சார்பில் வைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்து பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், குறிஞ்சி முருகன், பெருமாள் பிச்சை மற்றும் அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் வி.பி. எம்.எம். கல்வி நிறுவனங்கள் சார்பில் பக்தர்களுக்கு தண்ணீர், மோர், இளநீர் வழங்கப்பட்டது.


Next Story