ஆடிப்பூரத்தையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆடிப்பூரத்தையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
கிருஷ்ணகிரி:
ஆடிப்பூரம்
கிருஷ்ணகிரி பழையபேட்டை நரசிம்ம சாமி கோவில் தெருவில் அமைந்துள்ள ஏகாம்பரேஸ்வர காமாட்சி அம்மன் கோவிலில், 21-ம் ஆண்டு ஆடிப்பூர திருவிழா மற்றும் பால்குட ஊர்வலம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு வேதபாராயணம், 9 மணிக்கு கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், சுதர்சன, நவக்கிரக ஹோமங்கள் நடந்தன.
தொடர்ந்து பெண் பக்தர்கள் பால் குடங்களுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் சாமிக்கு பால் அபிஷேகம், கலசாபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தன. இரவு 7 மணிக்கு நரசிம்ம சாமி கோவில் தெரு, நேதாஜிசாலை, காந்திசாலை, தர்மராஜா கோவில் தெரு, மோகன்ராவ் காலனி வழியாக அம்மன் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஒரு லட்சம் வளையல் அலங்காரம்
கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நாராயண சாமி கோவிலில் ஆடி பூரத்தையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மேலும் சிறப்பு வழிபாடு, பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஓசூர் பெரியார் நகர் வேல்முருகன் கோவிலில் உள்ள துர்க்கையம்மனுக்கு ஒரு லட்சம் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் 11 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதேபோல் பாகலூர் அட்கோ ராஜராஜேஸ்வரி அம்மன் ஒரு லட்சம் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதேபோல் சூளகிரி, ராயக்கோட்டை, ஊத்தங்கரை, குருபரப்பள்ளி, வேப்பனப்பள்ளி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடிப்பூரத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.