பொன்னேரியை ஆழப்படுத்தி கொள்ளிடம் ஆற்று தண்ணீரை சேமிக்க வேண்டும்


பொன்னேரியை ஆழப்படுத்தி கொள்ளிடம் ஆற்று தண்ணீரை சேமிக்க வேண்டும்
x

கருகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்ற பொன்னேரியை ஆழப்படுத்தி கொள்ளிடம் ஆற்றின் தண்ணீரை சேமிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர்

பொன்னேரி

சோழ மன்னர்கள் போரில் வெற்றி பெற்றால் அதன் நினைவாக நினைவு தூண் அமைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளனர். ராஜேந்திர சோழன் கங்கையில் போரிட்டு வெற்றி பெற்றதன் நினைவாக நீரினை அடிப்படையாகக் கொண்ட நினைவு சின்னத்தை நிறுவ எண்ணி அதன் அடிப்படையில் அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழகங்கம் என்ற பொன்னேரியை உருவாக்கினார். 700 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் நிறையும் நீர், குடிநீர் தேவை, விவசாயம் மற்றும் இதர தேவைகளுக்குப் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது.

பிச்சனூர், குருவாலப்பர் கோவில், இளையபெருமாள் நல்லூர், கங்கைகொண்ட சோழபுரம், உள்கோட்டை, இடைக்கட்டு மற்றும் ஆயுதகளம் கிராமங்களில் உள்ள சுமார் 4,000 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறக் கூடிய வகையில் இந்த ஏரி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரம் காப்பாற்ற இந்த ஏரியை ஆழப்படுத்தி தண்ணீரை தேக்கி வைக்க கொள்ளிடம் ஆற்றில் இருந்து பொன்னேரிக்கு சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் கால்வாய் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

கடலில் கலக்கிறது

விவசாய சங்க தலைவர் முல்லைநாதன்:- கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடிக்கு மேல் உபரிநீர் காவிரி வழியாக கல்லணையில் திறக்கப்பட்டு அணைக்கரை கொள்ளிடம் வழியாக சென்று வீணாக கடலில் கலந்தது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 4 முறைக்கும் மேலாக நாள் ஒன்றுக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வீணாக கடலில் போய் சேர்ந்தது. கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை, கொள்ளிடத்தில் இருந்து கால்வாய் அமைத்து பொன்னேரியில் கொண்டு வந்து விவசாய பாசனத்திற்கு பயன்படுத்தும் வகையில், விவசாயிகளின் நீண்ட நாள் கனவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

மேலும் சுற்றுலா தலமாக அமைத்து படகு சவாரி போன்ற சுற்றுலா தலமாகவும் அமைக்க வேண்டும். விவசாயிகள் பயன்படும் வகையில் தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும். மேலும் பொன்னேரி பகுதியில் மற்றும் தண்ணீர் வரத்து வாய்க்கால்களை ஆக்கிரமித்து உள்ள பகுதிகளை உடனடியாக அகற்ற வேண்டும். இந்த பொன்னேரியின் மூலமாக தான் சுமார் 3,500 ஏக்கர் நெல் பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றோம். ஆனால் இந்த ஆண்டு ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள கீழ் பகுதியில் சரியான நேரத்தில் மழை பெய்யாமல் போனது. இதனால் மானாவாரி மற்றும் ஏரி பாசனத்தை நம்பி பயிரிடப்பட்ட ஒரு போக சாகுபடி காய்ந்து கருகி போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கருவாட்டு ஓடை வழியாக...

சமூக ஆர்வலர் வீரபாண்டியன்:- இந்த ஆண்டு பருவ மழை பொய்த்து போனதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையில் உள்ளது. ஏரி பாசனத்தை நம்பி நெல் பயிரிடப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் உள்ள பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க வேண்டும். ஏரியில் உள்ள 4 கண் பாசன வாய்க்கால்மதகுகளை உடனடியாக தூர்வாரி கடைமடை பகுதி வரை சீரமைக்க வேண்டும்.

விவசாயி தங்கவேல்:- பொன்னேரியின் நீர்மட்டம் சுமார் 17 அடி கொண்டது. தற்போது தூர்வாரப்படாத நிலையில் ஏரியின் நீர்மட்டம் குறைந்து போனது. கடந்த சில ஆண்டுகளாகவே கன மழை பெய்தால் ஒரு போக சாகுபடி செய்ய முடிந்தது. ஆனால் இந்த ஆண்டு பருவ மழை பொய்த்து போனதால் தண்ணீர் இல்லாமல் போனது. மேலும் மழை காலத்தில் ஏரி நிரம்பி பெரிய மதகு வழியாக தண்ணீர் திறந்து கருவாட்டு ஓடை வழியாக தண்ணீர் திறக்கப்படும். திறக்கப்படும் தண்ணீர் கருவாட்டு ஓடை வழியாக வடவாற்றில் கலந்து வீராணம் ஏரிக்கு செல்லும். நாங்கள் பலமுறை இந்த கருவாட்டு ஓடையை தூர்வார வேண்டும் என்று கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story