குளங்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும்; கலெக்டரிடம் கோரிக்கை
குளங்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
குளங்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
குறை தீர்க்கும் கூட்டம்
தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாப்தீன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கந்தசாமி, மாவட்ட பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் பிரான்சிஸ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அடிப்படை வசதிகள், இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல் உள்ளிட்ட 457 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். இவற்றை பெற்றுக் கொண்ட கலெக்டர் இவற்றின் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
ஆர்ப்பாட்டம்
திராவிட தமிழர் கட்சியினர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் அவர்கள் மாவட்டச் செயலாளர் கரு.வீரபாண்டியன் தலைமையில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், "சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் வினாத்தாளில் சாதி குறித்து கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இது பள்ளி மாணவ-மாணவிகளின் மனதில் சாதி எண்ணத்தை வளர்க்கும். எனவே இந்த வினாத்தாளை தயாரித்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
தலித் பெண்கள் எழுச்சி இயக்கம் சார்பில் இடைகாலைச் சேர்ந்த கிளை தலைவி மாதா கொடுத்துள்ள மனுவில், "இடைகால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ஆசிரியரை பணி நியமனம் செய்ய வேண்டும். கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டித்தர வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
குளங்களை தூர்வாரி...
பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட உள்ளாட்சி பிரிவு செயலாளர் ராஜ்குமார் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், "தென்காசி நகரில் மேல வல்லகுளம், கீழ வல்லகுளம், இடையன்குளம், மேல பச்சநாயக்கன்குளம், கீழப்பச்சநாயக்கன்குளம், உலகமன்குளம், ஜெக வீரராமபேரிகுளம், இடமலைகுளம் ஆகியவற்றை தூர்வாரி சீரமைக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.