இன்ஸ்பெக்டரை கண்டித்துபோலீஸ் நிலையத்தை வி.சி.க.வினர் முற்றுகைமயிலத்தில் பரபரப்பு


இன்ஸ்பெக்டரை கண்டித்துபோலீஸ் நிலையத்தை வி.சி.க.வினர் முற்றுகைமயிலத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 29 Aug 2023 6:45 PM GMT (Updated: 29 Aug 2023 6:45 PM GMT)

மயிலம் இன்ஸ்பெக்டரை கண்டித்து போலீஸ் நிலையத்தை வி.சி.க.வினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்

மயிலம்,

மயிலம் அருகே பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாங்கம். விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான இவர் ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று பொதுமக்களுடன் அதேபகுதியில் இயங்கும் தனியார் கல்குவாரிக்கு சென்று, விதிமுறைகளை மீறி பள்ளம் தோண்டுவதாக கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது கல்குவாரியில் இருந்தவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி ஊராட்சி மன்ற தலைவர் ராஜாங்கத்தை ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்ததாககூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட செயலாளர் திலீபன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மயிலம் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் ஊராட்சி மன்ற தலைவரை ஒருமையில் பேசிய இன்ஸ்பெக்டரை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பியபடி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்று மயிலம் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story