போலீசார் சிறப்பு வாகன சோதனை: மதுபோதையில் வாகனம் ஓட்டிய 14 பேர் மீது வழக்கு


போலீசார் சிறப்பு வாகன சோதனை: மதுபோதையில் வாகனம் ஓட்டிய 14 பேர் மீது வழக்கு
x

சென்னையில் போலீசார் சிறப்பு வாகன சோதனையின் போது மதுபோதையில் வாகனம் ஓட்டிய 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சென்னை

சென்னையில் தெருக்கள், சாலைகள், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் போன்ற பகுதிகளில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை கணக்கெடுக்க வேண்டும். பின்னர் விசாரணை நடத்தி அந்த வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்பேரில் சென்னை சட்டம்-ஒழுங்கு போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் ஒரு நாள் சிறப்பு ஆய்வு பணியில் ஈடுபட்டனர். இதில் உரிமை கோராத வகையில் கேட்பாரற்று கிடந்த 13 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. ஏற்கனவே உரிமை கோராமல் இருந்த 297 மோட்டார் சைக்கிள், 15 ஆட்டோக்கள் என மொத்தம் 312 வாகனங்கள் மீட்கப்பட்டு போலீஸ்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேலும் 13 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதால் இதன் எண்ணிக்கை 325 ஆக அதிகரித்தது.

இதில் தீவிர விசாரணைக்கு பின்னர் 20 வாகனங்களை அதன் உரிமையாளர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். உரிமை கோராத, முறையான ஆவணங்கள் இல்லாத 181 வாகனங்கள் மீது போலீசார் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதர வாகனங்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை போலீசார் தொடங்கி உள்ளனர்.

சென்னையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் சிறப்பு வாகன தணிக்கை நடத்தினர். இதில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முறையான ஆவணங்கள் இல்லாமல் வாகனங்கள் ஓட்டிய 84 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய 98 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story