'வாட்ஸ் அப்'பில் குறுஞ்செய்தி பரப்பிய மாணவரிடம் போலீசார் விசாரணை


வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி பரப்பிய மாணவரிடம் போலீசார் விசாரணை
x

மாணவி ஸ்ரீமதி சாவு குறித்து சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் போராட்டம் நடத்த வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி பரப்பியதாக மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஜங்ஷனில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

சூரமங்கலம்:-

மாணவி ஸ்ரீமதி சாவு குறித்து சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் போராட்டம் நடத்த வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி பரப்பியதாக மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஜங்ஷனில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவி சாவு

கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த ராமலிங்கத்தின் மகள் ஸ்ரீமதி (வயது17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம சின்னசேலம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி மர்மமான முறையில் மாணவி ஸ்ரீமதி இறந்து கிடந்தார்.

மாணவி சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர் மற்றும் மாணவர் அமைப்பினர் உள்ளிட்ட பலதரப்பினர் போராட்டம் நடத்தினர் இந்த போராட்டம் கலவரமாக மாறியது.

இந்த நிலையில் மாணவி சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் போராட்டம் நடத்த வருமாறு 'வாட்ஸ் அப்'பில் குறுஞ்செய்தி பரவியது.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

இந்த குறுஞ்செய்தி அனுப்பியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் மாத்தூரை சேர்ந்த தினேஷ் (வயது 18) என்பதும் இவர் சேலம் அரியானூரில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து மாணவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போராட்டம் நடத்தப்படுவதாக குறுஞ்செய்தி பரவியதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பரபரப்பு

சேலம் மாநகர துணை கமிஷனர் மாடசாமி, ெரயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், சேலம் மேற்கு சரக உதவி கமிஷனர் நாகராஜன் மற்றும் ெரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சேலம் ரெயில் நிலையம் முன்பு நேற்று போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story