திண்டுக்கல்லை கலக்கிய போலி ஆடிட்டர் கைது


திண்டுக்கல்லை கலக்கிய போலி ஆடிட்டர் கைது
x

திண்டுக்கல்லில் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்து வந்த போலி ஆடிட்டரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்:

சென்னையில் செயல்படும் இந்திய பட்டய கணக்காயர்கள் நிறுவனத்தின் செயலா் பாலாஜி. இவர் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.

அதில் இந்திய பட்டய கணக்காயர்கள் நிறுவனத்தில் பதிவு செய்யாமல், திண்டுக்கல்லில் நாகராஜன் என்பவர் ஆடிட்டர் அலுவலகம் நடத்துகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறப்பட்டு இருந்தது.

புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் நாகராஜன் ஆடிட்டருக்கு படிக்காமல், ஆடிட்டர் எனக்கூறி பலருக்கு வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜனை கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதுகுறித்து போலீசார் கூறுகையில்,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பழைய செஞ்சை பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 39). இவர் பி.காம். (சி.ஏ.) படித்து இருக்கிறார். மேலும் பட்டப்படிப்பை முடித்ததும் ஒரு ஆடிட்டர் அலுவலகத்தில் வேலை செய்துள்ளார்.

அப்போது தொழில் அதிபர்கள், வணிகர்கள், தனியார் ஊழியர்களுக்கு வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்வதை தெரிந்து கொண்டார். இதற்கிடையே அங்கு கிடைத்த சம்பளத்தை கொண்டு குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனால் ஆடிட்டர் போன்று தானே பிறருக்கு வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய நினைத்தார். அதை உள்ளூரில் செய்தால் சிக்கிவிட வாய்ப்பு இருப்பதால், வெளியூருக்கு செல்ல முடிவு செய்தார்.

அதன்படி திண்டுக்கல்லில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆடிட்டர் எனக்கூறி அலுவலகம் திறந்தார். உடனுக்குடன் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ததால் பலரும் அவரை நாடினர். அதில் ஓரளவு வருமானம் கிடைத்து வந்தது. இதற்கிடையே வருமான வரி கணக்கு தாக்கலில் ஆடிட்டர் நாகராஜன் என குறிப்பிட்டதால், இந்திய பட்டய கணக்காயர்கள் நிறுவனத்தினர் ஆய்வு செய்தனர். இதனால் அவர் சிக்கி கொண்டதாக போலீசார் கூறினர்.


Next Story