பா.ஜனதா நிர்வாகிகளை நள்ளிரவில் கோர்ட்டுக்கு அழைத்து வந்த போலீசார்


பா.ஜனதா நிர்வாகிகளை நள்ளிரவில் கோர்ட்டுக்கு அழைத்து வந்த போலீசார்
x
தினத்தந்தி 28 Jun 2023 8:48 PM GMT (Updated: 30 Jun 2023 7:55 AM GMT)

கும்பகோணம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜனதா கட்சி நிர்வாகிகளை கைது செய்த போலீசார் அவர்களை நள்ளிரவில் கோர்ட்டுக்கு அழைத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜனதா கட்சி நிர்வாகிகளை கைது செய்த போலீசார் அவர்களை நள்ளிரவில் கோர்ட்டுக்கு அழைத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியல்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டை பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு செல்ல சரியான சாலை வசதி இல்லை எனக் கூறி உரிய சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பா.ஜனதா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சாக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளி முன்பு பா.ஜனதா வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பா.ஜனதா கட்சியினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மன்னார்குடி -கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நாச்சியார் கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கைது

ஆனால் போராட்டக்காரர்கள் பேச்சுவார்த்தைக்கு உடன்படாததால் போலீசார் அவர்களை கைது செய்தனர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தி, பா.ஜனதா தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார், மாவட்ட செயலாளர் பசும்பொன் பாண்டியன், நகர தலைவர் வெங்கட்ராமன் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

வழக்குப்பதிவு செய்யப்பட்ட 8 பேரையும் ஒரு தனியார் இடத்தில் தங்க வைத்திருந்த போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவில் கும்பகோணம் கோர்ட்டுக்கு அழைத்து வருவதாக தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து கும்பகோணம் கோர்ட்டு வளாகப் பகுதியில் ஏராளமான பா.ஜனதா கட்சியினர் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்பு

அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க கோர்ட்டு வளாகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களை நீதிபதியின் முன்பு ஆஜர் படுத்துவதற்கு முன்னதாக அவர்களுக்கு கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவர்களை போலீசார் ஆஸ்பத்திரியில் இருந்து நீதிபதி குடியிருப்புக்கு அழைத்துச் செல்ல வேனில் ஏற்ற முயன்றனர். அப்போது அங்கு திரண்டு இருந்த பா.ஜனதா கட்சியினர் கைது செய்யப்பட்டவர்களை வேனில் ஏற்றக்கூடாது அவர்களை ஊர்வலமாக நீதிபதி குடியிருப்புக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என வலியுறுத்தி போலீசாரின் வேனை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர்.

நீதிமன்ற காவல்

இதனைத் தொடர்ந்து போலீசார் அங்கு திரண்டு இருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தினர். பின்னர் சதீஷ்குமார் உள்ளிட்ட 8 பேரையும் போலீஸ் வாகனத்தில் ஏற்றி நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.

வழக்கு குறித்து விசாரணை நடத்திய நீதிபதி, 8 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 8 பேரையும் போலீசார் புதுக்கோட்டையில் உள்ள சிறைக்கு அழைத்துச் சென்று அடைத்தனர். பா.ஜனதா நிர்வாகிகளை போலீசார் நள்ளிரவு நேரத்தில் கோர்ட்டுக்கு அழைத்து வந்தது கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story