திருஉத்தரகோசமங்கை கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை


திருஉத்தரகோசமங்கை கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை
x

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோச மங்கையில் வராகி அம்மன் கோவிலில் வெண்கல சிலை மாயமான சம்பவம் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோச மங்கையில் வராகி அம்மன் கோவிலில் வெண்கல சிலை மாயமான சம்பவம் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

சிலை மாயம்

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கையில் உள்ள புகழ் வாய்ந்த வராகி அம்மன் கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முக்கால் அடி உயரம், ஒன்றரை கிலோ எடையுள்ள வராகி அம்மன் வெண்கலச்சிலை மாயமானது. இதையடுத்து கோவில் பூசாரி ஒருவர் மாயமான சிலைக்கு பதிலாக புதிய சிலை வாங்கி வைத்து விட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகபூபதி, கணேசன், சேகர் மற்றும் போலீசார் நேற்று காலை திருஉத்தரகோசமங்கை வராகி அம்மன் கோவிலுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கோவிலில் பணியில் இருந்த பட்டர்கள் 5 பேரை வரவழைத்து விசாரித்தனர். சிலை எப்படி மாயமானது, புதிய சிலை எவ்வாறு வந்தது, பழைய சிலையை எடுத்தது யார், அந்த காலகட்டத்தில் பணியில் இருந்தவர்கள் யார் என்பது போன்ற விவரங்களை விசாரித்தனர்.

போலீசார் விசாரணை

மேலும் கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை பெற்று அதன் அடிப்படையில் விசாரிக்கவும் போலீசார் முடிவு ெசய்துள்ளனர். கோவிலில் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் சிலைகள், பூஜை பொருட்கள் மற்றும் சிலைகள் சரியான எண்ணிக்கையில் உள்ளதா என்று ஆய்வு செய்யவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மலைச்சாமி விரைவில் திருஉத்தரகோசமங்கை வர உள்ளதாகவும், அப்போது திவான் முன்னிலையில் கோவிலில் உள்ள சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் உள்ளிட்டவை ஆவணங்களின் அடிப்படையில் சரியான எண்ணிக்கையில் உள்ளதா என்பதை பரிசோதிக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

வராகி அம்மன் கோவில் தவிர திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலிலும் ஆவணங்களின் அடிப்படையில் சிலைகள் உள்ளிட்டவை சரியாக உள்ளதா என ஆய்வு செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


Next Story