மதம், சாதி, இனத்தின் பெயரால் பிரிவினை செய்யும் கட்சிகள் மத்தியில் பா.ம.க. வளர்ச்சிப்பாதையில் மக்களை ஒருங்கிணைக்கிறது- டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேச்சு


மதம், சாதி, இனத்தின் பெயரால் பிரிவினை ஏற்படுத்தும் கட்சிகள் மத்தியில் பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே வளர்ச்சியின் பெயரால் மக்களை ஒருங்கிணைக்கிறது என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.

ஈரோடு

பவானி

மதம், சாதி, இனத்தின் பெயரால் பிரிவினை ஏற்படுத்தும் கட்சிகள் மத்தியில் பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே வளர்ச்சியின் பெயரால் மக்களை ஒருங்கிணைக்கிறது என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.

பாடுபடும் தலைவர்

ஈரோடு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்கூட்டம் பவானியில் நேற்று இரவு நடந்தது. இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் 43 ஆண்டுகளாக நாட்டின் முன்னேற்றத்துக்காக பாடுபடும் தலைவர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நாம் செயல்பட்டு வருகிறோம்.

தமிழ்நாட்டில் 55 ஆண்டுகளாக திராவிட கட்சிகளாக தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சி செய்கின்றன. ஆனால் எந்த முன்னேற்றமும் கிடைக்கவில்லை. நம் மக்கள் இன்னும் அதே குடிசைகளில் வாழ்கிறார்கள். எந்த முன்னேற்றமும் இல்லை.

பவானி என்றால் ஜமுக்காளம். உலகப்புகழ் பெற்ற பவானி ஜமுக்காளத்தை உற்பத்தி செய்யும் நெசவாளர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கிறதா?. பவானி மட்டுமல்ல, ஈரோடு, திருப்பூர், கோவையில் சுமார் 10 லட்சம் ஜவுளி தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். எதற்கு எடுத்தாலும் வரி வரி என்றால்... எங்களை வாழ விடுங்கள்.

வாய்ப்பு தாருங்கள்

பாட்டாளி மாடல் என்பது மக்களுக்கான வளர்ச்சித்திட்டங்களை கொண்டு இருப்பது. தமிழ்நாட்டில் அதிக எம்.எல்.ஏ.க்கள் கொண்ட எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. இருந்தாலும், உணர்வுப்பூர்வ அரசியல், திட்டமிடல், அறிவுப்பூர்வ அரசியலுடன் உண்மையான எதிர்க்கட்சியாக பா.ம.க. உள்ளது.

இந்திய அரசியலில் மதம், சாதி, இனம் என்று பிரிவினை ஏற்படுத்தும் கட்சிகள் மத்தியில் வளர்ச்சி என்ற பெயரில் மக்களை ஒருங்கிணைக்கும் ஒரே கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி உள்ளது. இன்று தமிழ்நாட்டில் போடப்படும் பல திட்டங்கள், குறிப்பாக வேளாண்மைக்கு தனி பட்ஜெட், போதை ஒழிப்பு, ஆன்லைன் விளையாட்டு ஒழிப்பு என்று பல திட்டங்கள் நமது போராட்டத்தால் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இப்படி அடுத்தவர்களுக்காக ஆலோசனை செய்வது எத்தனை நாளுக்கு... மக்களே எங்களுக்கும் ஒரு முறை வாய்ப்பு தாருங்கள். 5 ஆண்டுகளில் அடுத்த 50 ஆண்டுகளுக்கான திட்டங்களை நிறைவேற்றுவோம்.

இவ்வாறு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.


Related Tags :
Next Story