பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்; 21,392 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்


பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 21,392 மாணவ-மாணவிகள் தேர்வை எழுதுகிறார்கள்.

புதுக்கோட்டை

பிளஸ்-2 பொதுத்தேர்வு

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்கி 3-ந் தேதி வரை நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் கல்வித்துறை அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிளஸ்-2 பொதுத்தேர்வுக்காக மாவட்டத்தில் 97 தேர்வு மையங்களும், 11 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், 2 விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களும், 25 வழித்தடங்களும், தனித்தேர்வர்களுக்கு 2 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பிளஸ்-2 பொதுத்தேர்வை மாணவர்கள் 10,482 பேரும், மாணவிகள் 10,910 பேர் என மொத்தம் 21,392 பேர் எழுதுகிறார்கள். தனித்தேர்வர்கள் ஆண்கள் 208 பேரும், பெண்கள் 131 பேர் என மொத்தம் 339 பேர் எழுதுகிறார்கள். தேர்வுக்காக தேர்வு மையங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

போலீஸ் பாதுகாப்பு

தேர்வு மையங்களில் மாணவ-மாணவிகளுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்வு மையத்தில் இருக்கைகளில் மாணவ-மாணவிகளின் நுழைவுச்சீட்டு எண் எழுதும் பணி நேற்று நடைபெற்றது.

அறந்தாங்கியில் அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தேர்வு அறையில் மாணவ-மாணவிகளின் நுழைவுச்சீட்டு எண்ணை எழுதினர். தேர்வு நாளை தொடங்க உள்ள நிலையில் மாணவ-மாணவிகள் இறுதிக்கட்ட படிப்பில் மும்முரமாக உள்ளனர்.

பிளஸ்-1 பொதுத்தேர்வு

தேர்வையொட்டி தேர்வு மையங்கள் அமைந்துள்ள பள்ளிகளுக்கு பஸ்கள் தடையில்லாமல் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிளஸ்-2 பொதுத்தேர்வை தொடர்ந்து பிளஸ்-1 பொதுத்தேர்வு நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வருகிற 5-ந் தேதி வரை நடக்கிறது. பிளஸ்-1 பொதுத்தேர்வை புதுக்கோட்டை மாவட்டத்தில் 8,616 மாணவர்களும், 9,996 மாணவிகள் என மொத்தம் 18,612 பேர் எழுத உள்ளனர். தனித்தேர்வர்கள் ஆண்கள் 104 பேரும், பெண்கள் 98 பேர் என மொத்தம் 202 பேர் எழுதுகிறார்கள்.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி தொடங்கி 20-ந் தேதியுடன் நிறைவடைகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 25,081 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.


Next Story