பிளஸ்-2 தேர்வு முடிவு: தமிழகத்தின் ஒரே திருநங்கை மாணவி தேர்ச்சி


பிளஸ்-2 தேர்வு முடிவு: தமிழகத்தின் ஒரே திருநங்கை மாணவி தேர்ச்சி
x

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய ஒரே திருநங்கை மாணவி தேர்ச்சி பெற்றார். ‘அரசு பணிக்கு செல்வதே தனது லட்சியம்’ என்று அவர் தெரிவித்தார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரேயா (வயது 17). திருநங்கையான இவர், அங்குள்ள கிருஷ்ணவேணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கணக்கு பதிவியல் துறை படித்து வந்தார். தற்போது நடந்து முடிந்த பிளஸ்-2 பொதுத்தேர்வில் இந்த மாணவி 600-க்கு 337 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதிய ஒரே திருநங்கை மாணவி ஸ்ரேயா என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அவரை, பள்ளி தலைமை ஆசிரியை சரஸ்வதி மற்றும் ஆசிரியைகள், மாணவிகள் பாராட்டினர். மேலும் அவருக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து மாணவி ஸ்ரேயா நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசு பணியே லட்சியம்

எனது சிறு வயதிலேயே தந்தை பிரிந்து சென்று விட்டதால், தாய் ராஜேஸ்வரியுடன் வசித்து வருகிறேன். அவர் என்னை கூலி வேலை செய்து படிக்க வைத்து வருகிறார். பள்ளியில் என்னை திருநங்கை என்று ஒதுக்காமல் அனைத்து மாணவிகளையும் பார்த்து கொள்வது போல் ஆசிரியைகள், தலைமை ஆசிரியை பார்த்து கொண்டனர். மேலும் நன்றாக படிக்க வேண்டும் என்று அவர்கள் என்னை ஊக்குவித்தனர். இதனால் என்னால் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற முடிந்தது.

பி.பி.ஏ., எம்.பி.ஏ. படித்து அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்பதே என் லட்சியம். எனது மேல் படிப்புக்கு அரசு உதவி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story