ஆன்லைன் ரம்மி விளையாடி ரூ. 20 லட்சத்தை இழந்த பெயிண்டர் தற்கொலை


ஆன்லைன் ரம்மி விளையாடி ரூ. 20 லட்சத்தை இழந்த பெயிண்டர் தற்கொலை
x

மணலியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ. 20 லட்சத்தை இழந்த பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

திருவொற்றியூர்,

சென்னை, மணலி அறிஞர் அண்ணா முதல் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன் (வயது 37). இவரது மனைவி வரலட்சுமி. இவர்களுக்கு பிரணாவ்( 8), பிரதீப் (6) என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜன் பெயிண்டிங் காண்ட்ராக்ட் எடுத்து ஆட்களை வைத்து வேலை செய்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக இவருக்கு ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டு தீவிரமாக விளையாடி உள்ளார். இதனால் இவருக்கு ஏராளமான பணம் இழப்பு ஏற்பட்டதாக தெரிகிறது . அக்கம் பக்கத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என பலரிடம் கடன் வாங்கி உள்ளதாகவும் தெரிகிறது.

மேலும் மனைவியின் நகைகளையும் அடகு வைத்து ரூ. 20 லட்சம் வரை கடன் வாங்கியதாக தெரிகிறது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக உறவினர்களும் வந்து ரம்மி விளையாட்டை விட்டு விடு என அறிவுரை கூறியுள்ளனர்.

இவரால் ரம்மி விளையாட்டை விட முடியாத நிலையில் போன் இருந்தால்தானே விளையாடுவோம் என நினைத்து அவரது போனையும் அடகு கடையில் அடகு வைத்து உள்ளார். இருந்தாலும் தனக்கு ஏற்பட்ட கடனுக்கு ரம்மி விளையாட்டு தான் காரணம் என மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு குடும்பத்தினர் அனைவரும் படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது இவர் ஹாலில் ஒரு ஸ்டூலில் ஏறி சேலையால் மேலே மாட்டப்பட்டு இந்த கொக்கியில் தூக்கில் தொங்கி உள்ளார். அப்போது அந்த ஸ்டூல் கீழே விழும் சத்தத்தை கேட்டு மனைவி வேகமாக எழுந்து வந்து பார்த்த போது கணவர் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே தனது உறவினர்களுடன் சேர்ந்து அவரை இறக்கி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இறப்பதற்கு முன் நாகராஜன் எழுதி வைத்துள்ள கடிதத்தில் ஆன்லைன் ரம்மியால் தனக்கு ரூ.20 லட்சம் வரை கடன் ஏற்பட்டது. அதனால் தற்கொலை செய்து கொண்டதாக எழுதி வைத்துள்ளார். ரம்மி விளையாடி பெயிண்டர் ஒருவர் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story