பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்


பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
x

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

திண்டுக்கல்

விழிப்புணர்வு முகாம்

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கொத்தப்புள்ளி ஊராட்சி நிர்வாகம் சார்பில், கதிர் நரசிங்க பெருமாள் கோவில் அருகே பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கி பேசினார். அப்போது, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கினார்.

மேலும் பிளாஸ்டிக்கை ஒழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதைத்தொடர்ந்து மஞ்சள் பையின் அவசியத்தை எடுத்துரைத்தார். மேலும் என்.சி.சி. மாணவ-மாணவிகள், பொதுமக்களுக்கு மஞ்ச பைகள் மற்றும் துண்டுபிரசுரங்களை கலெக்டர் வினியோகம் செய்தார். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் திலகவதி, ரெட்டியார்சத்திரம் ஒன்றியக்குழு தலைவர் ப.க.சிவகுருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக கொத்தப்புள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரி அன்பரசு வரவேற்றார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ரங்கசாமி, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதா, திருமலைசாமி, ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் மற்றும் பணியாளர்கள் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நெய்க்காரப்பட்டி பேரூராட்சி

இதேபோல் நெய்க்காரப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பொருட்கள் பயன்பாட்டை தடுப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி தலைவர் கருப்பாத்தாள் காளியப்பன் தலைமை தாங்கினார். செயல்அலுவலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.

முகாமில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பாலித்தீன் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்த வேண்டிய அவசியம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. முகாமையொட்டி நெய்க்காரப்பட்டி பகுதியில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மாணவிகள் சேகரித்தனர். இதில் பேரூராட்சி பணியாளர்கள், பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள், பொதுமக்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கொம்பேறிபட்டி ஊராட்சி

வடமதுரை ஊராட்சி ஒன்றியம் கொம்பேறிபட்டி ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த துப்புரவு முகாம் நடந்தது. இதற்கு கொம்பேறிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜரத்தினம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இதையொட்டி கொம்பேறிபட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் துப்புரவு பணி மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கும் பணி நடந்தது. இதில் தூய்மை காவலர்கள், வார்டு உறுப்பினர்கள், பணிதளப்பொறுப்பாளர்கள், மஸ்தூர் பணியாளர்கள் உள்பட பலர் ஈடுபட்டனர்.

இந்த முகாமில் வடமதுரை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவீந்திரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பேரின்பமணி, துணைத்தலைவர் கருப்பையா, வார்டு உறுப்பினர்கள் சின்னத்தங்கம், அருகாம்பாள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முகாமுக்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் பரமேஸ்வரன் செய்திருந்தார்.


Next Story