வங்கிகளை வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே இயக்க திட்டம்


வங்கிகள் வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே இயங்குவதற்கான திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்து, விரைவில் நடைமுறைப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அதற்கு ஆதரவு இருக்கிறது, எதிர்ப்பும் கிளம்புகிறது.

விருதுநகர்

வங்கிகள் வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே இயங்குவதற்கான திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்து, விரைவில் நடைமுறைப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அதற்கு ஆதரவு இருக்கிறது, எதிர்ப்பும் கிளம்புகிறது.

வங்கி சேவைகள்

பணப்பரிமாற்றங்களுக்கு அடித்தளமாக இருப்பது வங்கிச்சேவைகள் மட்டுமே. முன்பெல்லாம் ஒருவர் வங்கிச்சேவையை பெற வேண்டும் என்றால், நீண்டநேரம் வங்கிகளில் கால் கடுக்க காத்திருக்கவேண்டிய நிலை இருந்தது. அப்போது வங்கி கணக்குகள் வைத்திருந்தவர்களின் எண்ணிக்கையும் வெகு சொற்பமாக இருந்தது. இது நாளடைவில் மாற்றம் கண்டது. மத்திய-மாநில அரசுகளின் அனைத்து திட்டங்களையும் பெறுவதற்கு வங்கிக்கணக்கு மிக முக்கியமானதாக ஆனது.

இதன் காரணமாகவும், சேமிப்பு பழக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்ததாலும் இப்போது வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அதற்கேற்றாற்போல் வங்கிச்சேவைகளை எளிதாக்கவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிலும் காகிதப்பயன்பாட்டை குறைக்கும் வகையில், டிஜிட்டல் பரிமாற்றங்கள்தான் இப்போதைய வங்கி சேவையில் முதன்மைப்படுத்தப்படுகின்றன.

வாரத்துக்கு 5 நாட்கள் செயல்படும்

என்னதான் டிஜிட்டல் முறையில் சேவைகள் வழங்கப்பட்டாலும், சில தேவைகளுக்கு நேரடியாக வங்கியை அணுகவேண்டிய நிலை இன்றளவும் இருக்கத்தான் செய்கிறது. அந்தவகையில் அனைத்து தரப்பு மக்களும் அவ்வப்போது வங்கியை நாடவேண்டிய உள்ளது.

தற்போது வரை வங்கிகளுக்கு மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும், அரசு விடுமுறை நாட்களிலும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுதவிர மாதத்தில் 2 மற்றும் 4-வது வார சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது. மற்ற அனைத்து நாட்களிலும் மக்கள் வங்கிகளை நேரடியாக அணுகி சேவையை பெற்றுவருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கும் விடுமுறைக்கான ஒப்புதல் பெற முயற்சிகள் நடந்துவருகின்றன. அதன்படி, இனி வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் இயங்கும் நிலை உருவாகியிருக்கிறது. வங்கி ஊழியர்கள் சங்கத்தினர், இந்திய வங்கிகள் சங்கத்துடனான (ஐ.பி.ஏ.) இருதரப்பு ஒப்பந்தத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட உள்ளது. விரைவில் ஒப்புதல் கிடைத்து நடைமுறைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே கூறப்படுகிறது. அவ்வாறு சனிக்கிழமை விடுமுறை விடப்பட்டாலும், அந்த 2 வார சனிக்கிழமை வேலைநாட்களை மற்ற நாட்களில் கூடுதல் நேரத்தில் பணி செய்து நிவர்த்தி செய்யப்படும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதிப்பு இருக்காது

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இதற்கு தற்போது எழுந்துள்ள ஆதரவும், எதிர்ப்பும் வருமாறு:-

விருதுநகர் வங்கி ஊழியர் சம்மேளனம் மாரிக்கனி:-

வங்கிகளில் வாரத்தில் 5 நாட்கள் வேலை என்பது தொடர்பான பிரச்சினைக்கு கடந்த பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படாமல் உள்ளது. வங்கி அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் 9 சங்கத்தினரும் வாரத்தில் 5 நாட்கள் வேலை என்பதை வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே நபார்டு வங்கியில் 5 நாட்கள் வேலை என்பதுதான் அமலில் உள்ளது.

தற்போதைய நிலையில் பணப்பரிவர்த்தனைக்கு பல்வேறு வழிமுறைகள் வந்து விட்ட நிலையில் 5 நாட்கள் வேலை என்பது பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிலையில் இருக்காது. ஆனால் வங்கி ஊழியர்களுக்கு இதனால் மன உளைச்சல் குறைவதுடன் வேலை நாட்களில் அவர்கள் பணியில் ஆர்வத்துடன் செயல்படும் வாய்ப்பு ஏற்படும். தற்போதைய நிலையில் வங்கிகளில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட அதிகாரிகளும், அலுவலர்களும் கூடுதல் நேரம்தான் பணியாற்றி வருகின்றனர்.

விருதுநகர் வணிகப்பிரமுகர் கார்த்திகேயன்:-

வணிக வட்டாரத்தில் பணப்பரிவர்த்தனை அனைத்தும் ஆன்லைன் முறையில் மேற்கொள்ளப்படும் நிலையில் வங்கிகளில் வேலை நாட்களை வாரத்தில் 5 நாட்களாக ஆக்குவதில் பிரச்சினைக்கு வாய்ப்பு இல்லை.

ஆனாலும் சிறு வணிகர்கள் பலர் இன்னும் வங்கிகளுக்கு நேரடியாக சென்று பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ளும் நடைமுறையை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்களுக்கு சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனாலும் இதில் உள்ள சாதக பாதகங்களை ஆய்வு செய்து அரசு முடிவெடுக்க வேண்டும்.

தொழிலாளர்கள் பாதிப்பு

தொழில்அதிபர் போத்தி சீனிவாசன்:- வங்கிக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டால் பல்வேறு தொழில்கள் நடத்தி வரும் வங்கியின் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள். அதிலும் குறிப்பாக சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு, தீப்பெட்டி, அச்சு உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு வழக்கமாக சனிக்கிழமைகளில் சம்பள பட்டுவாடா செய்வது வழக்கம். இது பல காலமாக கடைப்பிடித்து வரும் நிலை. இதற்கிடையில் சனிக்கிழமைகளில் வங்கிகள் செயல்படாமல் போனால் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பாதிப்பு ஏற்படும். சனிக்கிழமை சம்பளம் வழங்கப்படும் என்ற நிலை இருப்பதால் பணம் பட்டுவாடா செய்யும் பிற தொழிலை செய்தவர்கள் தங்கள் கணக்கில் இருந்து எங்கள் வங்கி கணக்குக்கு சனிக்கிழமைகளில் பணம் மாற்றி விடும் சூழ்நிலை உள்ளது. குறைந்த மதிப்பு பணமாக இருந்தால் ஏ.டி.எம். எந்திரங்கள் மூலம் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இதனால் சனிக்கிழமைகளில் கண்டிப்பாக வங்கிக்கு சென்று தேவையான பணத்தை எடுக்க வேண்டிய நிலை கட்டாயம் இருக்கிறது. ஆதலால் வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை என்றால் நிச்சயம் தொழிலாளர்களும், தொழில் அதிபர்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே இதுபோன்ற நிலையை மாற்றி அமைக்க வேண்டும்.

மறுபரிசீலனை

திருச்சுழியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் கனகராஜ்:- வங்கிகளில் வாரத்தில் 5 நாட்கள் மட்டும்தான் வேைல என்பது சாத்தியம் இல்லை. ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் வாரத்தின் 5 நாட்களும் வேலை நாட்களாக இருப்பதால் சனிக்கிழமைகளில்தான் வங்கி பரிவர்த்தனை செய்ய வங்கிக்கு செல்வர். இந்த நிலைமையில் சனிக்கிழமையில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டால் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அதே போல நகை கடன் வைப்பவர்களும் சிரமப்படுவர். ஆதலால் இந்த நடைமுறையை தவிர்க்க வேண்டும்.

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சீனிவாசகன்:- சத்திரப்பட்டி பகுதி முழுவதும் 80 மருத்துவ துணி நிறுவனங்களும், எண்ணற்ற ஏற்றுமதி நிறுவனங்களும் உள்ளன. இங்கு 6 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில் உள்ள பெரிய நிறுவனங்கள் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு பணம் பட்டுவாடா வங்கி மூலமாக செயல்படுத்தப்படுகிறது. மேலும் தொழிலாளர்கள் சம்பள பணத்தை வங்கி கணக்கும் மூலமாக பணம் பரிமாற்றம் செய்யப்படுகிறது. இதனால் வங்கிகள் 5 நாட்கள் வேலை என்பது சாத்தியமாகாது. இந்த நடைமுறை டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் மிகவும் கஷ்டமாக இருக்கும். இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.


Related Tags :
Next Story