புதிய கட்டிடம் கட்டக்கோரி மறியல்


புதிய கட்டிடம் கட்டக்கோரி மறியல்
x

கோவிலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டக்கோரி அனைத்து கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

எரியோடு அருகே உள்ள கோவிலூரில், அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் இடிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் இதுவரை புதிய கட்டிடம் கட்டப்படவில்லை. எனவே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, புதிய கட்டிடம் கட்டக்கோரி அனைத்து கட்சி சார்பில் கோவிலூரில் மறியல் நடந்தது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துசாமி தலைமை தாங்கினார்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் பெரியசாமி, கிளை செயலாளர் சண்முகம், சி.ஜ.டி.யூ. தலைவர் முருகேசன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி, அ.தி.மு.க. சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஹதர்அலி மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

மறியல் காரணமாக திண்டுக்கல்லில் இருந்து குஜிலியம்பாறை வழியாக கரூர் செல்லும் நெடுஞ்சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு துர்காதேவி, இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எரியோடு சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பின்னர் மறியலில் ஈடுபட்ட 41 பேரை கைது செய்து, எரியோடு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story