போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி துணை சூப்பிரண்டிடம் மனு


போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி துணை சூப்பிரண்டிடம் மனு
x

போராட்டம் நடத்தியவர்களை தகாத வார்த்தைகளால் பேசிய இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்தனர்.

அரியலூர்

அமைதி பேச்சுவார்த்தை

மீன்சுருட்டி அருகே ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு பகுதியில் விக்கிரவாண்டி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பணிகள் மற்றும் மேம்பாலம் கட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்தநிலையில் சுண்டிப்பள்ளம் அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் ஹெலன் கெல்லர் காது கேளாதோர் பள்ளி அருகே சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஜெயங்கொண்டம் தாசில்தார் அலுவலகத்தில் கடந்த மாதம் 11-ந் தேதி தாசில்தார் துரை தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சுண்டிப்பள்ளம் அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் ஹெலன் கெல்லர் காது கேளாதோர் பள்ளி அருகே சுரங்கப்பாதை அல்லது மேம்பாலம் அமைக்க மேல்மட்ட குழுவிற்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பது என தெரிவிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில், மேல்மட்ட குழுவிற்கு தகவல் தெரிவிக்காமலேயே அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்பட்டு சாலை அமைக்கும் பணியை தொடர்ந்து நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் மீன்சுருட்டி போலீஸ் நிலையத்தில் அனுமதி பெற்று நேற்று மதியம் 1 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெகன்நாத் போராட்டம் நடத்தியவர்களை தகாத வார்த்தைகளில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு அன்புமணி ராமதாஸ் வருகைக்காக பா.ம.க.வினர் ஜெயங்கொண்டத்தில் கட்சிக்கொடி கம்பங்களை நட்டபோது இன்ஸ்பெக்டர் ஜெகன்நாத் கட்சிக்கொடி கம்பத்தை பிடுங்கி எரிந்ததால் ஆத்திரம் அடைந்த பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் துணை சூப்பிரண்டிடம் மனு

இதையடுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையம் முன்பு போராட்டம் நடத்த போவதாகவும் ஜெயங்கொண்டம் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தெரிவித்தார்.

இந்தநிலையில் போராட்டம் நடத்தியவர்களை தகாத வார்த்தைகளால் பேசிய இன்ஸ்பெக்டர் ஜெகன்நாத் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கக்கோரி ஜெயங்கொண்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமையிலான நிர்வாகிகள் அரியலூர் மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ்குமாரிடம் மனு அளித்தனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் துணை சூப்பிரண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.


Related Tags :
Next Story