பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர், குரும்பலூர் ஆப்பூர் நல்லேந்திரர் சுவாமி கோவில் தேரோட்டம்


மாசி மக பெருந்திருவிழாவினை முன்னிட்டு பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் மற்றும் குரும்பலூர் ஆப்பூர் நல்லேந்திரர் சுவாமி கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

பெரம்பலூர்

தேரோட்டம்

பெரம்பலூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மாசி மக பெருந்திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவு சுவாமி சிம்ம, சேஷ, சூரியபிரபை, சந்திரபிரபை, யானை உள்ளிட்ட வாகனத்தில் திருவீதி உலா வந்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை உற்சவர் சந்திரசேகர சுவாமி, ஆனந்தவள்ளி தாயார் சிறப்பு அலங்காரத்தில், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர். அதனை தொடர்ந்து காலை 10 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. தேரோட்டத்தை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார். பின்னர் பக்தர்கள் தேரை தேரோடும் வீதிகளின் வழியாக இழுத்து வந்தனர். மதியம் மீண்டும் தேர் நிலைக்கு வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு கொடியிறக்கமும், தீர்த்தவாரியும் நடக்கிறது. வருகிற 10-ந் தேதி மஞ்சள் நீர் விடையாற்றி உற்சவத்துடன் மாசி மக பெருந்திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கோவில் திருப்பணியாளர்கள் செய்துள்ளனர்.

இன்று மஞ்சள் நீராட்டு

இதேபோல் குரும்பலூர் ஆப்பூர் நல்லேந்திரர் சுவாமி கோவிலின் மாசிமக திருத்தேர் திருவிழா கடந்த 26-ந் தேதி காட்டு கோவிலில் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 3, 4-ந் தேதிகளிலும், நேற்று முன்தினம் இரவும் சுவாமி புறப்பாடு நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. இதையொட்டி குரும்பலூர் சிவன் கோவில் முன்பு காலையில் அலங்கரிக்கப்பட்டிருந்த தேரில் உற்சவர் ஆப்பூர் நல்லேந்திரர் சுவாமி, நல்லதங்காள் அம்பாளுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் செண்டை மேளம் முழங்க தேரோட்டம் தொடங்கியது. பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) மஞ்சள் நீராட்டு விளையாடுதலும், இரவு காப்பு அறுத்தலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பூசாரிகள் மற்றும் குரும்பலூர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story