குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
x

சின்னதாராபுரம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கரூர்

சாலை மறியல்

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம், சின்னதாராபுரம் ஊராட்சி, டி. வெங்கடாபுரம், சத்தியா காலனியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆழ்குழாய் கிணறு மற்றும் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இப்பகுதி மக்களுக்கு கடந்த 20 நாட்களாக காவிரி குடிநீர் சரிவர கிடைப்பதில்லை. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் கூறியுள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்யக்கோரி நேற்று காலை காலிக்குடங்களுடன் கரூர்-தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த க.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) கிருஷ்ணமூர்த்தி, சின்னதாராபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் திருப்பதி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் பிரச்சினையை விரைந்து சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டத்தையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் குடிநீர் பிரச்சினையை சரி செய்யாவிட்டால் மீண்டும் மறியலில் ஈடுபடுவோம் என கூறி விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story