குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x

கத்தலூர் ஊராட்சியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை

ஆவூர்

10 நாட்களாக குடிநீர் வரவில்லை

விராலிமலை ஒன்றியம், கத்தலூர் ஊராட்சிக்குட்பட்ட ரோட்டாத்துபட்டி, குளத்து ஆத்துப்பட்டியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வராமல் இருந்துள்ளது.

இதனால் அப்பகுதி பொதுமக்கள் அந்த பகுதிகளில் உள்ள விவசாய கிணறு மற்றும் கோரையாற்றில் குழிதோண்டி தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்துள்ளனர். இதுகுறித்து ஊராட்சி செயலாளரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து விராலிமலை-கீரனூர் சாலையில் ரோட்டு ஆத்துப்பட்டியில் நேற்று காலை 9 மணியளவில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனைத்தொடர்ந்து அங்கு வந்த விராலிமலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் சத்தியசீலன் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

இதில் அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீரேற்றும் பழுதடைந்துள்ள மின் மோட்டாரை உடனடியாக பழுது நீக்கி, குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் விராலிமலை- கீரனூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story