ரிக் வண்டி டிரைவரின் உடலுடன் பொதுமக்கள் சாலைமறியல்


ரிக் வண்டி டிரைவரின் உடலுடன் பொதுமக்கள் சாலைமறியல்
x
சேலம்

எடப்பாடி:-

தெலுங்கானாவில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் ரிக் வண்டி டிரைவரின் உடலுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் எடப்பாடி அருகே பரபரப்பு ஏற்பட்டது.

ரிக் வண்டி டிரைவர்

எடப்பாடி ஒன்றியம், இருப்பாளி கிராமம் அக்கரைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் காசி. இவருடைய மகன் இளையராஜா (வயது 27). இவருக்கு ரோஜா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

ரிக் வண்டி டிரைவரான இளையராஜா, சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (33) என்பவருக்கு சொந்தமான ரிக்வண்டியில் கடந்த ஜனவரி மாதம் முதல் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பணி நிமித்தமாக இளையராஜா கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தெலுங்கானா மாநிலம், கரீம் நகரில் தங்கி இருந்து ரிக் வண்டி ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.

காணாமல் போனதாக...

இந்த நிலையில் கடந்த மாதம் 25-ந் தேதி இளையராஜாவின் உறவினர்களை தொடர்பு கொண்ட ரிக்வண்டி உரிமையாளர் ஜெயக்குமார், இளையராஜா தொடர்ந்து பணிக்கு வரவில்லை என்றும் அவர் திடீரென காணாமல் போனதாகவும் உறவினர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இளையராஜாவை அவரது உறவினர்கள் பல்வேறு இடத்தில் தேடி வந்தனர். இதனிடையே, இளையராஜாவின் குடும்பத்தை தொடர்பு கொண்ட கரீம் நகர் போலீசார், இளையராஜா கரீம் நகர் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து இளையராஜாவின் மனைவி ரோஜா, பூலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் கரீம் நகர் பகுதியில் பணிபுரிந்து வந்த தனது கணவர் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்திருந்தார்.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட பூலாம்பட்டி போலீசார், இளையராஜாவின் உறவினர்களை கரீம் நகர் போலீசாரிடம் நேரில் சென்று விவரங்களை கேட்டு அறிந்து உடலை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினர். அதன்பேரில் இளையராஜாவின் உறவினர் சுரேஷ், கரீம் நகருக்கு புறப்பட்டு சென்றார்.

உடலுடன் சாலைமறியல்

இதனிைடயே கரீம் நகரில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் இளையராஜாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இருப்பாளி கிராமத்திற்கு வந்தடைந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய உறவினர்கள் தங்கள் அனுமதியின்றி பிரேத பரிசோதனை செய்ததையும், மேலும் இளையராஜாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி கதறி அழுதனர்.

பின்னர் அவர்கள் எடப்பாடி-மேட்டூர் பிரதான சாலையில் இளையராஜாவின் உடலுடன் இருப்பாளி அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு சென்ற எடப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரலேகா தலைமையிலான போலீசார், இளையராஜாவின் உறவினர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். தெலுங்கானாவில் பணிபுரிந்து வந்த ரிக் வண்டி டிரைவர் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட சம்பவம், இருப்பாளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story