பன்றி பண்ணையை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


இலுப்பூர் அருகே பன்றி பண்ணையை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை

சாலை மறியல்

இலுப்பூர் அருகே உள்ள ஆலத்தூர் ஊராட்சி குறிச்சிப்பட்டியில் தனிநபருக்கு சொந்தமான பன்றி வளர்ப்பு பண்ணை உள்ளது. இங்கிருந்து வெளியேறும் கழிவுகள் அங்குள்ள உஞ்சலம் ஊரணியில் கலக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த ஊரணியில் உள்ள நீர் பயன்பாடற்றதாக மாறி வருவதாகவும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புதுக்கோட்டை- விராலிமலை சாலையில் மேட்டுச்சாலை என்னும் இடத்தில் மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது சில பெண்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலையில் படுத்து போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு காயத்ரி, தாசில்தார் வெள்ளைச்சாமி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதை ஏற்க மறுத்து பன்றி பண்ணையை அகற்றக்கோரி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மேலும், சம்பவ இடத்திற்கு கலெக்டர் வர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, ஆர்.டி.ஓ. குழந்தைசாமி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியல் முடிவுக்கு வந்தது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story