எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்ட மக்கள்


எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்ட மக்கள்
x

சாலை வசதி செய்து தர வலியுறுத்தி ரகுராமன் எம்.எல்.ஏ.வை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

சாலை வசதி செய்து தர வலியுறுத்தி ரகுராமன் எம்.எல்.ஏ.வை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலைவசதி

சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரத்தினபுரிநகரில் 600-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்ட சாலைகள் சேதமடைந்த நிலையில் இங்குள்ள மக்கள் தங்கள் பகுதிக்கு புதிய சாலை அமைத்து தர வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் சாலை அமைத்து கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் ராமசாமிபுரத்தில் நேற்று காலை நடைபெற்ற சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நிகழ்ச்சியில் சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன், சிவகாசி யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ் மற்றும் அதிகாரிகள், தி.மு.க.வினர், ம.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

முற்றுகை

சாத்தூர் எம்.எல்.ஏ. வருகை குறித்து தகவல் அறிந்த ரத்தினபுரிநகர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் பூமிபூஜை நடைபெற்ற இடத்தில் குவிந்தனர்.

அவர்கள் ரகுராமன் எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு தங்கள் பகுதிக்கு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். குடியிருப்பு பகுதியில் சாலை அமைக்காமல் பட்டாசு கடைகள் உள்ள பகுதிக்கு சாலை அமைக்க முடிவு செய்து இருப்பதை மாற்றி, முதலில் குடியிருப்பு பகுதியில் சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என அவர்கள் கூறினர். இதனை தொடர்ந்து குடியிருப்பு பகுதியில் சாலை அமைக்க தேவையான ஏற்பாடுகளை செய்வதாக எம்.எல்.ஏ. உறுதி அளித்தார். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சிவகாசி யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்களின் இந்த திடீர் முற்றுகை போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story