சாலை விரிவாக்கத்தின்போது குழாய் உடைக்கப்பட்டதால் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி


சாலை விரிவாக்கத்தின்போது குழாய் உடைக்கப்பட்டதால் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
x

நொய்யலில் சாலை விரிவாக்கத்தின்போது குழாய் உடைக்கப்பட்டதால் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மறியலில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

கரூர்

சாலை விரிவாக்கம்

கரூர் மாவட்டம் நொய்யல் குறுக்கு சாலை முதல் வேலாயுதம்பாளையம் வரை தார் சாலையின் இருபுறமும் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை க.பரமத்தி அருகே உள்ள ஒரு தனியார் ஒப்பந்த நிறுவனம் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தப் பணியினை செய்து வருகிறது.இந்நிலையில் வேட்டமங்கலம் ஊராட்சி, கோம்புப் பாளையம் ஊராட்சிகளில் குடியிருக்கும் பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு தார் சாலையின் இருபுறமும் குடியிருக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக தார் சாலையில் இருபுறமும் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு தொடர்ந்து குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தார் சாலையின் இருபுறமும் சுமார் 3 அடி ஆழத்திற்கு சாலை விரிவாக்க பணிக்காக குழிகள் பறிக்கப்பட்டு வருவதால் தார் சாலையின் இருபுறமும் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் குடிநீர் குழாய்கள் நெடுகிலும் நொறுங்கி சேதம் அடைந்து விட்டது.

குடிநீர் வரவில்லை

இதன் காரணமாக தார் சாலை ஓரத்தில் இருபுறமும் உள்ள குடியிருப்பு வீடுகளுக்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் ஏராளமான குடியிருப்பு வாசிகள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். நீரின்றி அமையாது உலகு என்ற அடிப்படையில் தண்ணீரின்றி இருக்கும் பொது மக்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்களுக்கு குடிநீர் வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பொதுமக்கள் சாலையில் இறங்கி சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

கோரிக்கை

எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி குடிநீர் குழாய்கள் சாலை ஓரத்தில் செல்வது குறித்து தெரிந்திருந்தும் ஒப்பந்ததாரர்கள் எதையும் பொருட்படுத்தாமல் குழியை பறித்து குடிநீர் குழாயை உடைத்தது குறித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் குடிநீர் குழாயை பொக்லைன் எயந்திரம் மூலம் உடைத்த ஒப்பந்ததாரர் உடனடியாக தார் சாலையின் இருபுறமும் நெடுகிலும் குடிநீர் குழாய் பதித்து தர வேண்டும் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story