இறைச்சி கழிவுகளை கொட்ட முயன்ற லாரி டிரைவருக்கு அபராதம்
இறைச்சி கழிவுகளை கொட்ட முயன்ற லாரி டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ராதாபுரம்:
ராதாபுரம் அருகே ஊரல்வாய்மொழியில் உள்ள காட்டுப்பகுதிகளில் கேரளாவில் இருந்து லாரிகள் மூலம் மீன்கள் கொண்டுவரப்பட்டு தரையில் காயப்போட்டு பின்னர் அவை அரவை ஆலைக்கு அனுப்பி வைக்கப்படும். இந்நிலையில் நேற்று முன்தினம் தனக்கர்குளம் வழியாக ஊரல்வாய்மொழிக்கு வந்த லாரியில் அதிக துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து தனக்கர்குளத்தை சேர்ந்த பெருமாள் என்பவர் ராதாபுரம் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் ராதாபுரம் இன்ஸ்பெக்டர் ஜான்சன் மற்றும் போலீசார் விரைந்து வந்து லாரியை மடக்கி பிடித்து சோதனையிட்டனர். இதில் கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகளை இங்கு கொட்டுவதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக லாரி டிரைவர் ராதாபுரம் அருகே உள்ள பட்டர்குளத்தை சேர்ந்த அருள் என்பவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். பின்னர் அந்த லாரியை கேரளாவுக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.