அரசு மருத்துவமனையில் பெண் நோயாளி மரணம்.. கவனக்குறைவே காரணம்: பாஜக விளாசல்


அரசு மருத்துவமனையில் பெண் நோயாளி மரணம்.. கவனக்குறைவே காரணம்: பாஜக விளாசல்
x

ஏழை எளிய மக்களின் உயிர் காக்கும் அரசு மருத்துவமனைகளை, கவனக்குறைவாக நடத்துவதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை:

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அமராவதி என்ற பெண், நேற்று உயிரிழந்தார். மின்தடை ஏற்பட்டதால் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள வென்டிலேட்டர்கள் செயலிழந்ததில், அந்த நோயாளி உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.

இந்த விஷயத்தில் தமிழக அரசுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில், வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர், அரை மணி நேரத்திற்கும் மேல் மின்வெட்டு காரணமாக மரணமடைந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

திமுக ஆட்சியில், ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனைகள், எத்தனை துச்சமாக நடத்தப்படுகின்றன என்பதை இந்த துயரச் சம்பவம் மீண்டும் உணர்த்தியிருக்கிறது. அரசு மருத்துவமனைகள் இத்தகைய அவல நிலையில் இருக்கும்போது, தமிழக மருத்துவக் கட்டமைப்பை ஐரோப்பிய நாடுகளுடன்தான் ஒப்பிட வேண்டும் என்று வெட்கமே இல்லாமல் கூறிக்கொள்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

ஊழல் செய்து சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை என்றால், தனியார் மருத்துவமனையில் உயர்தர சிகிச்சைதான் வழங்க வேண்டும் என்று ஓடோடிச் செல்லும் திமுக அரசு மற்றும் அமைச்சர்கள், ஏழை எளிய மக்களின் உயிர் காக்கும் அரசு மருத்துவமனைகளை, இத்தனை கவனக்குறைவாக நடத்துவதற்கு தமிழக பாஜக சார்பாக வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் துயர சம்பவத்தில் பலியான சகோதரியின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க, திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


Next Story