பலியான 94 குழந்தைகளுக்கு பெற்றோர்-பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி


பலியான 94 குழந்தைகளுக்கு பெற்றோர்-பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
x

பலியான 94 குழந்தைகளுக்கு பெற்றோர்-பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

தஞ்சாவூர்

கும்பகோணம்:

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் கருகி பலியான 18-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. பலியான குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

94 குழந்தைகள் கருகி பலி

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெரு பகுதியில் இயங்கி வந்த ஸ்ரீ கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை மாதம் 16-ந் தேதி திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அந்த பள்ளியில் படித்த 94 குழந்தைகள் தீயில் கருகி பலியானார்கள். மேலும் 18 குழந்தைகள் தீக்காயமடைந்தனர்.

இந்த துயர சம்பவம் உலகம் முழுவதும் பேரதிர்ச்சியையும், மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்தியது.

18-ம் ஆண்டு நினைவு தினம்

இந்த தீ விபத்தில் பலியான குழந்தைகளின் நினைவாக ஆண்டுதோறும் ஜூலை 16-ந் தேதி தீ விபத்து ஏற்பட்ட பள்ளியின் முன்பு குழந்தைகளை இழந்த பெற்றோர்களின் சார்பில் நினைவு தினம் மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

அந்த வகையில் நேற்று 18-ம் ஆண்டாக குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தீ விபத்து நடந்த பள்ளியின் முன்பு உயிரிழந்த குழந்தைகளின் புகைப்படங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது.

கண்ணீர்மல்க அஞ்சலி

அதன் முன்பு குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் மாலை அணிவித்து, புத்தாடைகள் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து கும்பகோணம் மாநகர தி.மு.க. சார்பில் அரசு தலைமை கொறடா கோவி.செழியன் தலைமையில் கும்பகோணம் பாலக்கரை பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நினைவு பூங்காவில் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக வந்து தீ விபத்து ஏற்பட்ட பள்ளி முன்பு வைக்கப்பட்டிருந்த குழந்தைகள் உருவப்படத்திற்கு மலர் வளையம் வைத்து மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் சு.ப. தமிழழகன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

குழந்தைகள் பாதுகாப்பு தினமாக...

தீ விபத்தில் குழந்தைகளை இழந்த பெற்றோர்கள், அரசு கொறடா கோவி செழியனிடம், ஜூலை 16-ந் தேதியை குழந்தைகள் பாதுகாப்பு தினமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை குறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துசசென்று ஜூலை 16 அன்று குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்கவும், தொடர்ந்து உள்ளூர் விடுமுறை அளிக்கவும் வலியுறுத்துவதாக அரசு தலைமை கொறடா கோவி. செழியன் தெரிவித்தார்.

அரசியல் கட்சியினர்

தொடர்ந்து அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் ஒன்றிய செயலாளர் என்.ஆர்.வி.எஸ். செந்தில், அண்ணா தொழிற்சங்க மாநில துணை தலைவர் பாண்டியன், எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் அழகு த.சின்னையன், அண்ணா தொழிற்சங்க மத்திய சங்க முன்னாள் செயலாளர் சக்திவேல், பா.ம.க சார்பில் மாவட்ட செயலாளர் ஜோதிராஜ், ஒன்றிய செயலாளர் தமிழரசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகிகள் சுந்தரராஜன், சாமிநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

மாலையில் பள்ளியில் இருந்து மோட்ச தீபம் ஏந்தியபடி ஊர்வலமாக சென்று மகாமக குளத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.


Related Tags :
Next Story