ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்


ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்
x

வடமதுரை புதிய பள்ளி கட்டிடம் கட்டக்கோரி பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.

திண்டுக்கல்

வடமதுரை அருகே கொம்பேறிபட்டி ஊராட்சி செம்மனாம்பட்டியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 53 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். இந்த நிலையில் பள்ளியின் கட்டிடம் சேதமடைந்த நிலையில் உள்ளதால் அதனை இடித்து அகற்ற அரசு உத்தரவிட்டது. அதன்படி அதிகாரிகள் பள்ளி கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையறிந்த பெற்றோர் திரண்டு வந்து பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது பழைய கட்டிடத்தை இடிப்பது குழந்தைகளுக்கு பாதுகாப்பு தான் என்றாலும் புதிய கட்டிடம் கட்டும் வரை மாணவ-மாணவிகள் கல்வி கற்க தற்காலிகமாக வகுப்பறை வசதி ஏற்படுத்தி தரவேண்டும். அதுவரை எங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அப்போது பள்ளி கட்டிடத்தை இடிக்க மட்டுமே உத்தரவு உள்ளது. மற்ற நடவடிக்கை குறித்து இன்னும் அறிவிப்பு வரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் ஆத்திரமடைந்த பெற்றோர் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த வடமதுரை வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா, வட்டார கல்வி அலுவலர்கள் நல்லுச்சாமி, முருகேஸ்வரி ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது புதிய பள்ளிக்கட்டிடம் கட்ட விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதுவரை அங்குள்ள கலையரங்கம் மற்றும் சமையல் கூடங்களில் தற்காலிக வகுப்பறைகள் அமைக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story