உறவினர்களுடன் பெற்றோர் சாலை மறியல்


உறவினர்களுடன் பெற்றோர் சாலை மறியல்
x

சின்னமனூர் அருகே மகன் கொலை வழக்கில் நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்களுடன் பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தேனி

சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டியை சேர்ந்தவர் காசிம். இவரது மகன் ராஜாமுகமது. இவர் கடந்த 2004-ம் ஆண்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இந்த கொலை சம்பவத்தில் விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிப்பிரிவுக்கு அவருடைய பெற்றோர் மனு அனுப்பினர். அதில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் மகன் கொலை வழக்கில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சின்னமனூரில் சாலை மறியலில் நேற்று ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கை வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தி இருந்தனர். தகவலறிந்த சின்னமனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் தேனி-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story