காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர பிரமோற்சவ விழா


காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர பிரமோற்சவ விழா
x

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் பங்குனி உத்திர பிரமோற்சவ விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

காஞ்சிபுரம்

கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் பஞ்சபூத தலங்களில் மண் ஸ்தலமாக விளங்குவது அருள்மிகு ஏகாம்பரநாதர் சாமி கோவிலில். இங்கு பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு நாளை விநாயகர் உற்சவம் நடைபெறுகிறது. 14 நாட்கள் நடைபெறவுள்ள இந்த பிரம்மோற்சவ திருவிழாவானது நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றம் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ விழாவினையொட்டி பகல் மற்றும் இரவு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரநாதர் எழுந்தருளி காஞ்சீபுரம் ராஜ வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.


அந்தவகையில் பகல் மற்று இரவு உற்சவங்கள் விவரம்:


26-ந் தேதி பகல் பவழக்கால் சப்பரம், இரவு சிம்ம வாகனம், 27-ந் தேதி பகல் சூரியப் பிரபை, இரவு சந்திரப்பிரபை, 28-ந் தேதி பகல் பூத வாகனம், இரவு பவழக்கால் சப்பரம், வெள்ளி பெருச்சாளி வாகனம், தங்கமயில் வாகனம், 29-ந் தேதி பகல் நாக வாகனம், இரவு வெள்ளி இடப வாகனம், 30-ந் தேதி பகல் வெள்ளி அதிகார நந்தி சேவை, இரவு ஸ்ரீ கைலாசபீட இராவண வாகனம், விழாவின் முக்கிய உற்சவங்களான 31-ந் தேதி பகல் 63 நாயன்மார்கள் திருக்கூட்டத்துடன் கண்ணாடி விமானத்தில் எழுந்தருளி வீதியுலா, அன்று இரவு பிரபல உற்சவமான வெள்ளித்தேர், ஏப்ரல் 1-ந் தேதி பகல் இரதோற்சவம், இரவு மகா அபிஷேகம், 2-ந் தேதி காலை ஆறுமுகப்பெருமான் எடுப்பு ரதகாட்சி, மாலை 5 மணிக்கு பிட்சாடனர் தரிசனம், இரவு வெள்ளி குதிரை வாகனம், 3-ந் தேதி பகல் ஆள்மேல் பல்லக்கு, இரவு தல மகிமை காட்சியான வெள்ளி மாவடி சேவை,


4-ந் தேதி பகல் சபாநாதர் தரிசனம், இரவு பங்குனி உத்திரம் திருக்கல்யாணம். 5-ந் தேதி விடியற்காலை கந்தப் பொடி உற்சவம், இரவு நூதன வெள்ளி உருத்திரகோடி விமானம், 6-ந் தேதி பகல் புருஷாமிருக வாகனம், இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா, 7-ந் தேதி பகல் சந்திரசேகரர் வெள்ளி இடத்தில் எழுந்தருளிச் சர்வ தீர்த்தத்தில் தீர்த்தவாரி, உற்சவ சாந்தி சிறப்பு, இரவு யானை வாகனத்துடன் கொடி இறக்கம் நடைபெறுகிறது. 8-ந் தேதி பகல் 108 கலசாபிஷேகம், சங்காபிஷேகம், இரவு பொன் விமானத்தில் திருமுறை உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.


இந்த விழாக்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர். இதனால் பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.


Next Story