பாம்பன், மண்டபம் விசைப்படகுகள் கடலுக்கு சென்றன
61 நாள் தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து பாம்பன், மண்டபம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். ராமேசுவரம் மீனவர்கள் இன்று நள்ளிரவில் மீன்பிடிக்க செல்கிறார்கள்.
ராமேசுவரம்,
61 நாள் தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து பாம்பன், மண்டபம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். ராமேசுவரம் மீனவர்கள் இன்று நள்ளிரவில் மீன்பிடிக்க செல்கிறார்கள்.
மீன்பிடி தடைக்காலம்
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ந் தேதி வரை மீன்கள் இனப்பெருக்க கால சீசனாக கருதப்படுகிறது. இந்த சீசனில் 61 நாள் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல அரசால் தடை விதிக்கப்படுகிறது.
அதுபோல் இந்த ஆண்டும் 61 நாள் மீன்பிடி தடைக்கால சீசன் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி தொடங்கியது. அதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, சோழியக்குடி, ஏர்வாடி, சாயல்குடி, மூக்கையூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விசைப்படகுகள் கடந்த 2 மாதமாக மீன்பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
மீன்பிடிக்க சென்றனர்
இந்த நிலையில் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்தது.
எனவே பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவே 80-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 500-க்கும் அதிகமான மீனவர்கள் தென் கடல் பகுதியான மன்னார் வளைகுடாவுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இதேபோல் மண்டபம் தெற்கு துறைமுகம், ஏர்வாடி, மூக்கையூர் உள்ளிட்ட துறைமுக பகுதிகளில் இருந்தும் 200-க்கும் அதிகமான விசைப்படகுகளில் சுமார் 1200-க்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இவ்வாறு மீன் பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் அனைவரும் இன்று காலை பலவகை மீன்களுடன் கரை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
2 மாத தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க சென்றுள்ளதால் அதிகமான மீன்கள் கிடைக்கும் என்ற மிகுந்த எதிர்பார்ப்பில் மீனவர்கள் சென்றுள்ளனர்.
ராமேசுவரம்
தமிழகத்திலேயே அதிகமான படகுகளை கொண்ட ராமேசுவரம் பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் இன்று நள்ளிரவு அல்லது அதிகாலையில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.