படித்தவர்களை ஈர்த்து வரும் இயற்கை விவசாயம்


படித்தவர்களை ஈர்த்து வரும் இயற்கை விவசாயம்
x

விளைச்சலை அதிகரிக்க தற்போது அதிகளவில் ரசாயன உரங்களை பயன்படுத்தும் கட்டாய மனப்போக்கு விவசாயிகளிடம் வளர்ந்து வருகிறது. அதுபோல் முழு விளைச்சல் அடையும் முன்பே காய்களை பறித்து ரசாயனம் மூலம் பழுக்க வைக்கும் ஆபத்தான மனப்போக்கும் வியாபாரிகளிடம் அதிகரித்து வருகிறது.

அரியலூர்

இயற்கை விவசாயம்

இதனால் எங்கும் ரசாயனம், எதிலும் ரசாயனம் என்ற நிலை உருவாகி, நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் எல்லாம் கொஞ்சம், கொஞ்சமாக கொல்லும் நஞ்சாக மாறி வருகின்றன. இயற்கையோடு மனிதர்கள் இணைந்து வாழ்ந்தபோது ஆபத்துகள் பெரிதாய் வந்தது இல்லை. அவர்கள் செயற்கையோடு கைகோர்த்த பிறகு ஆபத்துகளுக்கு பஞ்சமே இல்லை.

இப்போது மக்கள் இதை உணர தொடங்கி விட்டார்கள். படித்தவர்கள் மத்தியில் இதில் ஓர் எழுச்சியும் ஏற்பட்டு வருகிறது. அவர்களில் பலர் குழுக்களாக செயல்பட்டு இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பதை அறிகிறபோது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. இதுகுறித்து இயற்கை ஆர்வலர்களின் கருத்துக்களை பார்ப்போம்.

வேளாண்மை அதிகாரிகள் சான்றிதழ் வழங்க வேண்டும்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி பகுதியை சேர்ந்த இயற்கை விவசாயி அன்பழகன்:- ரசாயன உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்யும்போது அதிகளவு தானியங்கள் உற்பத்தி ஆகும். ஆனால் இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்யும்போது உற்பத்தியின் அளவு மிகவும் குறைவாகவே இருக்கும். இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் தானியங்களுக்கு நல்ல விலை கிடைப்பதில்லை. மேலும், இதனை சந்தைப்படுத்துவது மிகவும் சிரமமாக உள்ளது. நிறைய இடங்களில் ரசாயன உரங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் தானியங்கள் மற்றும் காய், கனிகளை இயற்கை முறையில் உற்பத்தி செய்ததாக கூறி விற்பனை செய்து வருகிறார்கள். இதன்காரணமாக இயற்கை முறையில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு உரிய மதிப்பு கிடைப்பதில்லை. இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு வேளாண்மை துறை அதிகாரிகள் சான்றிதழ் வழங்கி அவற்றை நல்ல விலைக்கு சந்தைப்படுத்த உதவ வேண்டும்.

இயற்கை உரங்கள்

உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த இயற்கை விவசாயி லட்சிதா:- பண்டைய காலங்களில் நமது மண்ணில் விளையும் நெல், கம்பு, வரகு, கேழ்வரகு, சாமை, சோளம், துவரை, கடலை, எள்ளு போன்ற உணவு வகைகளும், கத்தரி, வெண்டை, சுண்டை, முள்ளங்கி, முருங்கை போன்ற காய்கறிகளும், சிறு கீரை, அரைக்கீரை, முருங்கை, புளிச்சைக்கீரை, கரிசலாங்கண்ணி, பொன்னாங்கன்னி கீரைகளை உண்டு வந்தோம். மேலும் இவை மாட்டுச்சாணம், தழைச்சத்து, சாம்பல் போன்ற இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி வளர்த்து வந்தோம். இரண்டு அல்லது மூன்று நாட்களானாலும் குளிர்சாதன பெட்டியில் எந்த உணவு பொருட்களையும் வைக்காமல் இருந்தாலும் கெட்டுப்போனது இல்லை. ஆனால் தற்போது செயற்கை உரங்களை பயன்படுத்தி அதிகப்படியான உணவு பொருள்களை உற்பத்தி செய்தாலும் அவைகள் குளிர்சாதன பெட்டியில் வைத்து பதப்படுத்தினாலும் அவை கெட்டு, அழுகி விஷமாக மாறி பல்வேறு நோய்களை ஏற்படுத்துகிறது. எனவே படித்த இளைஞர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்கள் மீண்டும் முன்னோர்கள் வழியில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டால் மனித குலம் தலைக்கும்.

நிலம், தண்ணீர் பாதிப்பு

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், இயற்கை விவசாய ஆர்வலருமான சாந்த ஷீலா நாயர்:- நம் நாட்டில் முதலில் இயற்கை விவசாயம்தான் நடைமுறையில் இருந்து வந்தது. நாம்தான் பசுமைப்புரட்சி கொள்கையை கொண்டு வந்து அதற்காக செயற்கை முறை விவசாயத்தை கொண்டு வந்தோம். இதற்காக செயற்கை உரங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்தோம். அதுவும் நமக்கு அதிகளவிலான உற்பத்தியை கொடுத்தது. அதுவே, காலப்போக்கில் கூடுதலான ரசாயன உரங்களை கலந்ததால் நிலம் மற்றும் தண்ணீரில் பாதிப்பு ஏற்பட்டது. காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட விவசாய பொருட்களில் ரசாயன பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. தற்போது, தானியங்களுக்காக உணவு பாதுகாப்பு முறை இருக்கிறது.

அதே நேரத்தில் நிலத்தையும், நீரையும் பாதுகாக்க நாம் செயற்கை முறை விவசாயத்தை குறைத்து இயற்கை விவசாயத்தை கொண்டு வர வேண்டும். அதை மறுபடி கொண்டு வந்தால்தான் விளைச்சல் அதிகமாகும். பூமியை மீண்டும் உயிரோட்டம் உடையதாக கொண்டுவர வேண்டுமானால் அது இயற்கை விவசாயத்தால் தான் முடியும்.

இயற்கை விவசாயத்தில் விளைச்சல் குறைவு என்பதால் விவசாயிகள் அதனை முன்னெடுக்க வருவதில்லை. ஆனால், தற்போது இயற்கை விவசாயத்தில் நம்பிக்கை வைத்துள்ளவர்கள் இயற்கை விவசாயத்திலும் அதிகளவில் விளைச்சல் பண்ண முடியும் என்று கருதுகின்றனர். உற்பத்தி குறைவாகவே இருந்தாலும், இயற்கை விவசாயத்தில் உற்பத்தி செய்யப்பட்ட விளைபொருட்களின் தரம் அதிகமாக இருப்பதால் அதனை மக்கள் அதிக விலை கொடுத்து வாங்குவதற்கும் தயாராக இருக்கிறார்கள்.

இயற்கை விவசாயத்தை தொடர்ச்சியாக செய்தால், காலப் போக்கில் செயற்கை விவசாயத்தின் அளவிற்கு இயற்கை விவசாயத்திலும் மகசூல் கிடைக்கும். இயற்கை விவசாயத்தில் உரத்தின் விலை குறைகிறது. தண்ணீரின் தேவையும் குறைகிறது. இதனால் உற்பத்தி செலவு குறைகிறது. நெல், கோதுமை உற்பத்தியை நாம் எப்படி ஊக்குவித்தோமோ அதே போன்று இயற்கை விவசாயத்தையும் ஊக்குவிக்க வேண்டும். சிக்கிம் மாநிலத்திலும், பூட்டான் நாட்டிலும் தற்போது இயற்கை விவசாயம் மட்டுமே மேற்கொண்டு வருகிறார்கள்.

செயற்கை விவசாயத்தில் ரசாயனம் அதிகரிக்க அதிகரிக்க மண் வளம் குறைந்து உற்பத்தி குறைந்து வருகிறது. மீண்டும் இயற்கை விவசாயத்தை செய்வதின் மூலம் மட்டுமே மண் வளத்தை ஆரோக்கியமாக மாற்றி அதிக மகசூலை பெற முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story