தவறான முகவரியில் தபால் வழங்கியதற்காக ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு


தவறான முகவரியில் தபால் வழங்கியதற்காக ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு
x

தவறான முகவரியில் தபால் வழங்கியதற்காக ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தபால் நிலைய ஊழியர்களுக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அரியலூர்

தாமரைக்குளம்:

தவறான முகவரி

அரியலூர் மாவட்டம் திருமானூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் நுகர்வோர் பாதுகாப்பு குழு ஒன்றின் தலைவராக இருந்து வருகிறார். இவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி விண்ணப்பம் ஒன்றை திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொது தகவல் அலுவலருக்கு அனுப்புவதற்காக, அந்த முகவரியை தபால் உறையில் எழுதி, அதனை அரியலூர் தபால் நிலையத்தில், பதிவுத்தபால் மூலம் அனுப்ப தபால் நிலைய எழுத்தரிடம் கொடுத்துள்ளார்.

இதற்கான சேவை கட்டணமாக ரூ.30 பெற்றுக்கொண்ட தபால் நிலைய எழுத்தர், அதனை கணினியில் பதிவு செய்தபோது அனுப்ப வேண்டிய முகவரியில் திருவாரூர் என்பதற்கு பதிலாக, தஞ்சாவூர் என பதிவு செய்துவிட்டார். மேலும் தபாலை பிரித்து அனுப்பும் நிலையிலும் தவறு ஏற்பட்டு, அந்த தபால் அரியலூர் மாவட்டத்தில் உள்ள மதுவிலக்கு அமலாக்க பிரிவின் கூடுதல் சூப்பிரண்டு அலுவலகத்தில் தபால்காரரால் வழங்கப்பட்டு விட்டது.

இழப்பீடு வழங்க உத்தரவு

இதையடுத்து அந்த தபால் தவறான முகவரியில் வழங்கப்பட்டு விட்டது என்பதை, தபால் துறையில் இருந்து வரப்பெற்ற ஒப்புதல் அட்டையில் உள்ள அரியலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலக முத்திரை மூலம் தெரிந்து கொண்ட பாலசுப்பிரமணியன், இது குறித்து தபால் நிலைய அதிகாரிக்கு அறிவிப்பு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அவர், இது பற்றி அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி டாக்டர் ராமராஜ், உறுப்பினர்கள் பாலு மற்றும் லாவண்யா ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில், சம்பந்தப்பட்ட தபால் நிலைய அலுவலர், தபாலை பதிவு செய்த எழுத்தர் மற்றும் தபால்காரர் ஆகியோர் கூட்டாக ரூ.30 ஆயிரத்தை இழப்பீடாக புகார்தாரர் பாலசுப்பிரமணியனுக்கு வழங்க வேண்டும், என உத்தரவிட்டனர்.


Next Story