சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை இடிக்க உத்தரவு


சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை இடிக்க உத்தரவு
x

சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை இடிக்க உத்தரவு

திருவாரூர்

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஊராட்சி ஒன்றிய ஆணையர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அரசு உயர்நிலைப்பள்ளி

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தாலுகா ஜாம்புவானோடை வடகாடு பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 1983-ம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடம் மிகவும் சேதமடைந்துள்ளது. மேலும் கட்டிடத்தின் மேற்கூரையின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து எந்தநேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. சேதமடைந்துள்ள கட்டிடத்தால் மாணவர்களுக்கு அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உயிர்பலி ஏற்படும் முன்பு சேதமடைந்துள்ள கட்டிடத்தை இடிக்க வேண்டும் என பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

புதிய கட்டிடம் கட்டித்தர கோரிக்கை

தற்போது சேதமடைந்துள்ள கட்டிடத்தில் தான் மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இதனால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து இந்த கட்டிடத்தை இடித்து விட்டு அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள், பெற்றோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடமும், பள்ளிக்கு போதிய ஆசிரியர், தலைமை ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பள்ளியில் சமையல் அறைக்கு கட்டிடம் இல்லாததால், தகர கொட்டகையில் சமையல் அறை இயங்கி வருகிறது. எனவே தகர கொட்டகையில் இயங்கும் சமையல் அறைக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இடிக்க உத்தரவு

இதுகுறித்த செய்தி படத்துடன் 'தினத்தந்தி' நாளிதழில் பிரசுரிக்கப்பட்டது.

இதன் எதிரொலியாக நேற்று மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவக்குமார் நேரில் ஆய்வு செய்தார். உடனடியாக மாணவர்களை வெளியேற்றி சேதமடைந்த கட்டிடத்தை இடிப்பதற்கு உத்தரவிட்டார். அப்போது சமையல் அறையை கட்டுவதற்கும் உடனடியாக முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.

ஆய்வின்போது செயற்பொறியாளர் மகேஸ்வரன், ஊராட்சி மன்ற தலைவர் லதா பாலமுருகன் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உடன் இருந்தனர். செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், உடனடியாக ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்ட மாவட்ட கலெக்டர், ஆய்வு மேற்கண்ட ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவக்குமார் ஆகியோருக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.


Next Story