"இப்போது 99% பேருக்கு இந்த வைரஸ் தான் பரவுகிறது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


இப்போது 99% பேருக்கு இந்த வைரஸ் தான் பரவுகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x

2010ஆம் ஆண்டு முதல் யானைக்கால் நோயாளிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை,

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக,மராட்டியம்,கேரளா,டெல்லி ஆகிய மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை தேவை என மாவட்ட கலெக்டர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார்.

இதனையடுத்து,தற்போது சென்னை,செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது எனவும்,இதனால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கூறி மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில்,தமிழகத்தில் பெரும்பாலும் 99% பேருக்கு பிஏ2 வகை வைரஸ் தான் பரவுகிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

"வண்டலூர் அருகே உள்ள விஐடி கல்லூரியில் 163 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்,மாணவர்களை வீடுகளில் தங்கியிருக்க செய்வது,கல்வி நிறுவனத்திற்கு விடுமுறை வழங்குவது போன்ற நிலைகளை ஏற்படுத்த வேண்டாம்.ஏனெனில்,இந்த தொற்றை நாம் கட்டுப்படுத்தி விடலாம்.

எனினும்,கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.அதன்படி,நான்கு பேர் அமரக்கூடிய மேசை என்றால் இரண்டு பெரும்,6 பேர் அமரக்கூடிய மேசை என்றால் 3 பேரும்,எட்டு பேர் அமரக்கூடிய மேசை என்றால் நான்கு பேரும் உட்கார்ந்து உணவருந்த உத்தரவிட்டுள்ளோம்.நிச்சயம் விஐடி கல்லூரியில் கொரோனா கட்டுக்குள் வந்துவிடும். உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் விடுதிகளில் உள்ள மாணவர்கள் உணவருந்தும் போதும், கூடும் போதும் தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

மேலும்,மாணவர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் இன்றோ,நாளையோ வந்துவிடும்.அதைப்போல அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில்,பிஏ2 வகை கொரோனா தொற்றுதான் கண்டறியப்பட்டுள்ளது.மேலும்,சத்திய சாய்,சென்னை ஐஐடியில் மாணவர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் பிஏ2 வகை கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

எனவே,அண்ணா பல்கலைக்கழகம்,சத்திய சாய்,சென்னை ஐஐடியில் எடுக்கப்பட்ட பரிசோதனைகள் படி 99% பேருக்கு பிஏ2 வைரஸ் தான் உள்ளது.ஒருவருக்கு மட்டும் பிஏ3 வகை தொற்று பரவியுள்ளது. இதனிடையே,நாவலூரில் ஒருவருக்கு பிஏ4வகை கொரோனா இருந்த நிலையில்,அவரும் குணமாகிவிட்டார்",என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,பேசிய அமைச்சர்,"ஒமைக்ரான் வகை தொற்றைப் பொறுத்த வரையில் 7 வகை உள்ளது. அதன்படி,பிஏ1,பிஏ2,பிஏ3,பிஏ4,எக்ஸ்இ உள்ளிட்ட ஏழு வகையிலான தொற்று உள்ளது.அந்த வகையில்,தற்போது பெரும்பாலும் 99% பேருக்கு பிஏ2 வைரஸ் தான் உள்ளது. இது ஏ வகை தான்.எனினும் மக்கள் அச்சப்பட தேவையில்லை. தமிழகத்தில் விரைவில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துவிடும் என்று கூறியுள்ளார்.


Next Story