ஆன்லைன் சூதாட்டம்: வடமாநிலப் பெண் தற்கொலைக்கு கவர்னர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் - வைகோ


ஆன்லைன் சூதாட்டம்: வடமாநிலப் பெண் தற்கொலைக்கு கவர்னர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் - வைகோ
x

ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்த வடமாநிலப் பெண் தற்கொலைக்கு கவர்னர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.

சென்னை,

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒடிசா மாநிலம் இந்துப்பூரைச் சேர்ந்தவர் அஜய்குமார் மாண்டல் (25). இவரது மனைவி ஸ்ரீதனா மாஞ்சி (22). இவர்களுக்கு திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இந்த தம்பதியினர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஊரில் இருந்து பிழைப்பு தேடி தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்து உள்ள கரிவலம்வந்தநல்லூர் அருகே வேலாயுதபுரத்தில் வாடகை வீடு எடுத்து இருவரும் தங்கி இருந்தனர்.

அஜய்குமார் மாண்டல் பெருமாள்பட்டி பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் கூலி தொழிலாளியாக வேலைப் பார்த்து வருகிறார். காலையில் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம். அதன்படி வேலைக்கு சென்று விட்டு, மாலையில் வீடு திரும்பிய அஜய்குமாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

வீட்டில் அவரது மனைவி ஸ்ரீதனா தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அவர் கதறி அழுதார். பின்னர் ஸ்ரீதனாவின் மரணம் குறித்து உடனடியாக கரிவலம்வந்தநல்லூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் ஸ்ரீதனா மாஞ்சி உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அஜய்குமார் மாண்டல் கூலி வேலைக்குச் சென்றதும் வீட்டில் தனியாக இருந்த ஸ்ரீதனா மாஞ்சி தனது செல்போனில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதில் அவர் ரூ.70 ஆயிரம் வரை இழந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் அவரது செல்போனை போலீசார் ஆய்வு செய்த போது, ஆன்லைனில் ரம்மி விளையாடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழக அரசு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய அவசர சட்ட முன் வரைவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி, கடந்த அக்டோபர்-28 ஆம் தேதி கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது.

கவர்னர் விளக்கம் கேட்டதையடுத்து, தமிழக அரசு உரிய விளக்கத்தை அளித்தும் கவர்னர் ஆர்.என்.ரவி தக்க காரணம் இன்றி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை. மேலும் அவசர சட்டமும் காலாவதி ஆகி விட்டது.

இந்நிலையில்தான் வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது போன்ற தற்கொலைகள் ஏராளமாக நடப்பதால்தான் தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய அவசர சட்டம் இயற்ற முனைந்தது. கவர்னர் வழக்கம் போல் அதிகார ஆணவத்தோடு நடந்து கொண்டதால் மேலும் ஒரு உயிர் போய் விட்டது. இதற்கு தமிழ்நாடு கவர்னர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டோர் தற்கொலை செய்யும் அளவுக்கு நிலைமை மோசமான சூழலில், அதனைத் தடுக்க தமிழ்நாடு அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காததைக் கண்டித்து டிசம்பர் 1ஆம் தேதி காலை 11 மணிக்கு கவர்னர் மாளிகை முன் திராவிடர் கழகம் சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் பங்கேற்கும்.

கழகத் தோழர்கள் பெருமளவில் பங்கேற்று, கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story