ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு புதிய கிணறுகள் அமைக்க அனுமதி வழங்கப்படவில்லை


ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு புதிய கிணறுகள் அமைக்க அனுமதி வழங்கப்படவில்லை
x

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு புதிய கிணறுகள் அமைக்க அனுமதி வழங்கப்படவில்லை

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு புதிய கிணறுகள் அமைக்க எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லை என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கலெக்டரிடம் மனு

ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம், விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் தங்க தமிழ்செல்வன், காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் அன்பு வீரமணி, இயற்கை உழவர் இயக்க செயலாளர் வரதராஜன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் சீனி செல்வம் உள்பட பலர் நேற்று மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணனிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில், திருவாரூர் பகுதியில் ஓ.என்.ஜி.சி. புதிய கிணறு அமைக்கும் பணிகளை தொடங்க கூடாது என கூறியிருந்தனர்.

உற்பத்தி நிறுத்தம்

இதுதொடர்பாக கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டம் தண்டலை ஊராட்சிக்குட்பட்ட தியானபுரம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினரால் 2 எண்ணெய் கிணறுகள் உரிய அனுமதி பெற்று இயங்கி வந்தன. அவைகளில் ஒரு கிணறு கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதமும், மற்றொன்று 2019 அக்டோபர் மாதமும் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணெய் கிணறு சிறுதுரப்பண கருவிகள் மூலம் பழுதுகள் சரி செய்திட பணிகளை மேற்கொண்டுள்ளது.

இந்த பணிகளுக்காக கடந்த 8-ந்தேதி அன்று ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினரால் பணிகள் மேற்கொள்ள சென்ற போது, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சாலை மிகவும் பழுது அடைந்துள்ளதாகவும், கனரக வாகனங்கள் சென்றால் மேலும் பழுதுகள் ஏற்படும் என்பதால் சாலையை சீரமைத்து தரக்கோரியும், தண்ணீர் சுத்திகரிப்பு எந்திரம் அமைத்து தரக்கோரியும் ஓ.என்.ஜி.சி. நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அனுமதி வழங்கப்படவில்லை

பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று சாலை மற்றும் தண்ணீர் சுத்திகரிப்பு எந்திரம் தங்களது சமூக பங்களிப்பு நிதி மூலமாக செய்து தருவதாக தெரிவித்ததன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினரால் பழுதுநீக்கம் பணிகளுக்காக மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய கிணறு அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. திருவாரூர் மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு புதிய கிணறுகள் அமைத்திட எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லை. மேலும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினரால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு மட்டுமே எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story