இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி: புதுக்கோட்டை-இலுப்பூர் சாலையில் கிராம மக்கள் மறியல்


இலுப்பூர் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலியானதால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் புதுக்கோட்டை-இலுப்பூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை

இருதரப்பினர் இடையே மோதல்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள புங்கினிபட்டியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் ராஜேஸ் (வயது 23). இவருக்கும், பூமருதவயல் பகுதியை சேர்ந்த விஜயன் (57) என்பவருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு புங்கினிப்பட்டி திரவுபதியம்மன் கோவில் அருகே இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இதில் ராஜேஸ், அஜீத் (23), கண்ணதாசன் (34), தங்கவேல் (33), கருப்பையா, இளவரசன், பாலு, விஜயன், சுபாஸ்சந்திரபோஸ் (33), மாரிமுத்து (28), பொன்னுச்சாமி (22), மணிகண்டன் (19), முருகேசன் (49), பாலாஜி (32) ஆகிய 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

சிகிச்சை பலனின்றி சாவு

இதையடுத்து அவர்கள் அனைவரும் இலுப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் படுகாயம் அடைந்து புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பூமருதவயலை சேர்ந்த முருகேசன் என்பவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் முருகேசனை அடித்து கொன்றவர்களை கைது செய்யக்கோரி புதுக்கோட்டை-இலுப்பூர் சாலையில் மேட்டுச்சாலை எனும் இடத்தில் இறந்தவர் உடலுடன் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் முருகேசனை அடித்து கொன்ற குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவர் வெளிநாடு சென்றுவிட்டதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் கிருஷ்ணன், போலீஸ் துணைசூப்பிரண்டுகள் காயத்திரி, சீராளன், இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகரன், ஹேமலதா உள்ளிட்டோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் மறியலை கைவிட்டனர். பின்னர் முருகேசனின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக புதுக்கோட்டை-இலுப்பூர் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story