ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
ஆடி அமாவாசையையொட்டி கடலூர் மாவட்டத்தில் முன்னோர்களுக்கு, ஏராளமானவர்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.
தேவர்களுக்கு 6 மாதம் பகலாகவும், 6 மாதம் இரவாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. பகல் காலத்தின் முதல் மாதமான தை மாதத்திலும், இராக்காலத்தின் முதல் மாதமான ஆடி மாதத்திலும் வரும் அமாவாசை தினம் இந்துக்களுக்கு சிறப்பு வாய்ந்ததாகும். அந்த தினத்தில் இந்துக்கள் நீர்நிலைகளுக்கு சென்று தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைந்து தங்களுக்கு நன்மைகள் செய்யும் என்று கருதுகிறார்கள். இதேபோல் இறந்தவர்களுக்கு முதன்முதலாக தர்ப்பணம் செய்வதும் ஆடி அமாவாசையில் இருந்து தான் தொடங்கப்படுவது வழக்கமாக உள்ளது.
கடலூர்
அந்த வகையில் ஆடி அமாவாசையையொட்டி கடலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் நீர் நிலைகளுக்கு சென்று தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். கடலூரில் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரைக்கு ஏராளமானவர்கள் தர்ப்பணம் கொடுப்பதற்காக வந்திருந்தனர். இதையொட்டி கடற்கரைக்கு புரோகிதர்களும் வந்து அமர்ந்திருந்தனர். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக வந்தவர்கள், கடலில் இறங்கி நீராடி விட்டு, புரோகிதர்களிடம் தேங்காய், அரிசி, காய்கறி, வேட்டி, துண்டு போன்றவற்றை கொடுத்து மறைந்த தங்களுடைய பெற்றோர்கள் மற்றும் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
முன்னதாக தர்ப்பணம் செய்வதற்குரிய பொருட்கள் கடலூர் உழவர் சந்தை, அண்ணா மார்க்கெட், பான்பரி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டது. இந்த பொருட்களை வாங்குவதற்காக காலையில் மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்ததை காண முடிந்தது.
சிதம்பரம்
இதேபோல் சிதம்பரத்தில் நடராஜர் கோவில் வளாகத்தில் உள்ள சிவகங்கை தீர்த்தகுளத்தில் ஏராளமானவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். அதிகாலை முதலே நூற்றுக்கணக்கானவர்கள் வந்து அங்குள்ள மண்டபத்தில் பூஜை செய்தனர். பின்னர் முன்னோர்களுக்கு பிடித்த காய்கறி, அகத்திக்கீரை மற்றும் எள் ஆகியவற்றை படைத்து, மந்திரங்களை சொல்லி தர்ப்பணம் செய்தனர். மேலும் தங்களது முன்னோர்களுக்கு பிடித்த காய்கறிகள், சேலை, வேட்டிகளை ஏழை, எளியவர்களுக்கு வழங்கினர்.