பழனி முருகன் கோவிலில் ஜனவரி 27-ம் தேதி குடமுழுக்கு...!


பழனி முருகன் கோவிலில் ஜனவரி 27-ம் தேதி குடமுழுக்கு...!
x
தினத்தந்தி 15 Dec 2022 4:03 PM GMT (Updated: 15 Dec 2022 4:04 PM GMT)

பழனி முருகன் கோவிலில் ஜனவரி 27-ம் தேதி குடமுழுக்கு நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திண்டுக்கல்,

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடாகவும், திரு ஆவினன்குடி என்றழைக்கப்படும் பழனி தண்டாயுதபாணி கோவில் விளங்குகிறது. இக்கோவிலின் குடமுழுக்கு கடந்த 2006-ம் ஆண்டில் நடைபெற்றது.

பொதுவாக ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ள கோவில்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடைபெறவேண்டும்.

அதன்படி, 2006-ம் ஆண்டுக்கு பிறகு பழனி முருகன் கோவிலில் கடந்த 2018-ம் ஆண்டு குடமுழுக்கு நடந்திருக்க வேண்டும். ஆனால், நடக்கவில்லை.

இந்த நிலையில் பழனி தண்டாயுதபாணி கோவிலின் குடமுழுக்கை இந்த ஆண்டு நடத்த கோவில் அறங்காவலர் குழு முடிவு செய்தது. இதனை தொடர்ந்து பழனி கோவிலில் குடமுழுக்கு பணிகள் முடுக்கி விடப்பட்டடு, தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் 2023-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story