பழுதான அரசு பஸ்களை இயக்க அதிகாரிகள் நிர்ப்பந்தம் ஊழியர்கள் குற்றம்சாட்டி வெளியிட்ட வீடியோ வைரல்


பழுதான அரசு பஸ்களை இயக்க அதிகாரிகள் நிர்ப்பந்தம்  ஊழியர்கள் குற்றம்சாட்டி வெளியிட்ட வீடியோ வைரல்
x

அரசு போக்குவரத்து கழகத்தில் பழுதான பஸ்களை இயக்க அதிகாரிகள் நிர்ப்பந்திப்பதாக ஊழியர்கள் குற்றம்சாட்டி வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

அரசு போக்குவரத்து கழகத்தில் பழுதான பஸ்களை இயக்க அதிகாரிகள் நிர்ப்பந்திப்பதாக ஊழியர்கள் குற்றம்சாட்டி வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

பஸ் ஊழியர்கள் வீடியோ

குமரி மாவட்டத்தில் பழுதடைந்த, அதுவும் ஓட்ட முடியாத அரசு பஸ்சையும் இயக்க சொல்லி அதிகாரிகள் வற்புறுத்துவதாக டிரைவர், கண்டக்டர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்தநிலையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 2 பேர் தங்களுடைய ஆதங்கத்தை வீடியோவாக எடுத்து சமூக வலைவளத்தில் பரவ விட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

நாகர்கோவில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் டிரைவர் மற்றும் கண்டக்டராக பணியாற்றி வரும் ஒருவர் அழுதபடி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

தண்டனை இல்லையா?

அதிகாரிகள் செய்யும் தவறுக்கு பணியாளர்கள் தண்டனை அனுபவிக்கும் நிலை உள்ளது. என்னை போன்ற பணியாளர்கள் சிறிதாக செய்யும் தவறுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. பஸ்களை முறையாக பராமரிக்காமல் எங்களிடம் வழங்கும் அதிகாரிகளுக்கு தண்டனை இல்லையா? சில தினங்களுக்கு முன்பு என்னால் ஓட்டப்பட்ட பஸ்சில் குளிர்சாதன வசதி செயல்படாததால் பயணிகளின் கோபத்துக்கு ஆளாகி அவர்களிடம் கெஞ்ச வேண்டிய நிலை ஏற்பட்டது.

பயணிகள் எங்களை நம்பி வருகிறார்கள். அவர்களை எப்படி பத்திரமாக அழைத்துச் செல்வது? அதிகாரிகள் பொறுப்பற்ற தன்மையில் செயல்படுவகின்றனர்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

யார் பொறுப்பு?

இதேபோல் ராணித்தோட்டம் பணிமனை கண்டக்டர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:-

பிரேக் இல்லாத பஸ்சை அதிகாரிகள் தங்களுக்கு வழங்கியுள்ளனர். இதுகுறித்து பணிமனை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தேன். ஆனால் அந்த பஸ்சை ஓட்டச் சொல்லி நிர்ப்பந்தப்படுத்துகிறார்கள். இந்த பஸ்சை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று பிரேக் டெஸ் செய்து பார்ப்போம். அதன்பிறகு அந்த பஸ் ஓட்ட தகுதியானதா? தகுதியற்றதா? என்பது தெரிய வரும். எங்கள் பிரச்சினைகளை அதிகாரிகளிடம் தான் சொல்ல முடியும். ஆனால் அவர்கள் அதை கண்டுகொள்வதில்லை. பயணிகள் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பேற்க முடியும்?.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

இந்த வீடியோ விவகாரம் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


Next Story