வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு
வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளருமான ரமேஷ் சந்த் மீனா, மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மேலக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு, மாணவர்களின் எண்ணிக்கை, உணவின் தரம் போன்றவை குறித்து கேட்டறிந்ததுடன் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை சாப்பிட்டு ஆய்வு செய்தார். பின்னர், கீழக்குடியிருப்பு, கொம்மேடு கிராமத்தில் உள்ள பயோ குப்பைக் கிடங்கு, செங்குந்தபுரத்தில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கழுவந்தோண்டி, பெரியவளையம் பகுதிகளில் நடைபெறும் பல்வேறு பணிகளையும், ஆமணக்கந்தோண்டி அங்கன்வாடி மையம், உட்கோட்டையில்(வடக்கு) அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கோட்டாட்சியர் பரிமளம், தோட்டக்கலை துணை இயக்குனர் ஆனந்த், பொது சுகாதார துணை இயக்குனர் கீதாராணி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.