சேலத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் அதிகாரிகள் சோதனை
சிறுமியிடம் கருமுட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரத்தில் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சேலம்:
சிறுமியிடம் கருமுட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரத்தில் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சிறுமியின் கருமுட்டை விற்பனை
ஈரோட்டை சேர்ந்த 38 வயதுடைய பெண்ணுக்கு 6 வயதில் மகள் உள்ளார். சிறுமிக்கு 3 வயது இருக்கும் போதே, அந்த பெண் தனது கணவரை பிரிந்து பெயிண்டர் ஒருவருடன் வாழ்ந்து வந்தார். அந்த பெண் தனது கருமுட்டையை தனியார் ஆஸ்பத்திரிகளில் விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டு இருந்தார்.
இந்த நிலையில் தனது மகள் என்றும் பாராத அந்த கொடூர தாய், தனது கள்ளக்காதலன் மூலம் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், அதன் மூலம் சிறுமியின் கருமுட்டையை தனியார் ஆஸ்பத்திரியில் விற்பனை செய்த அவலம் நடந்து உள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி போலீசில் சிறுமி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த சிறுமியின் தாயார், அவளது கள்ளக்காதலன், வேன் டிரைவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சோதனை நடத்தினர்
இந்த நிலையில் சிறுமியின் கருமுட்டையை எடுத்து விற்பனை செய்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனரகம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சோதனை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனரக இணை இயக்குனர் (சட்டம்) விசுவநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று சேலத்தில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரிக்கு திடீரென்று சென்றனர்.
பின்னர் அந்த ஆஸ்பத்திரிக்கு, பாதிக்கப்பட்ட சிறுமி அழைத்து வரப்பட்டாரா? அதற்கான ஆதாரங்கள் ஏதாவது உள்ளதா? சிறுமியின் பெயர் ஆஸ்பத்திரி பதிவேட்டில் பதிவாகி இருக்கிறதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சோதனை நடத்தினர்.
பரபரப்பு
இது குறித்து மருத்துவத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-
சேலத்தில் சோதனை நடத்தப்படும் ஆஸ்பத்திரியில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தற்போது வரை வந்தவர்களின் பெயர் விவரங்கள் குறித்து விசாரித்து வருகிறோம். அதன்படி இந்த ஆஸ்பத்திரியில் உள்ள கருத்தரிப்பு மையத்தில் எத்தனை கருத்தரிப்புகள் நடைபெற்று உள்ளன. கருமுட்டைகள் யார், யாரிடம்? இருந்து பெறப்பட்டு உள்ளன. மேலும் கருமுட்டைகள் பெறப்பட்டதற்கு முறையான ஆவணங்கள் உள்ளனவா? என்பது குறித்தும் சோதனை நடத்தி வருகிறோம்.
சோதனையின் முடிவில் தான் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரியில் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் இருந்து கருமுட்டைகள் பெறப்பட்டு உள்ளதா? மேலும் மற்றவர்களிடம் இருந்து முறைகேடாக கருமுட்டைகள் பெறப்பட்டதா? என்ற விவரங்கள் தெரியவரும். முறைகேடு நடந்து இருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஓசூரில் பழைய பெங்களூரு சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் மருத்துவ குழுவினர் நேற்று இரவு சோதனை நடத்தினர்.