சீமான் மீதான வழக்கை விசாரிக்க அதிகாரி நியமனம்


சீமான் மீதான வழக்கை விசாரிக்க அதிகாரி நியமனம்
x

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பட்டாபிராம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சென்னை,

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது. கருணாநிதியை விமர்சிப்பதற்காக 'சண்டாளன்' என வேறு ஒரு சமூக பெயரை சீமான் பயன்படுத்தியதன் மூலம் சம்பந்தப்பட்ட சமூகத்தினரை அவர் இழிவுப்படுத்தி உள்ளார்.

எனவே, சீமான் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆவடி பட்டாபிராமை அடுத்த தண்டுரை வள்ளலார்நகரைச் சேர்ந்த அஜேஷ் என்பவர் பட்டாபிராம் போலீசில் புகார் செய்தார். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதைத்தொடர்ந்து, அஜேஷ் தனது புகார் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க பட்டாபிராம் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என சென்னையில் உள்ள மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் மனு அளித்தார். இந்த புகார் மனுவை விசாரித்த ஆணையம், மனுதாரரின் புகாரின் பேரில் சீமான் மீது பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் சீமான் மீது பட்டாபிராம் போலீசார் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின்கீழ வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்தில் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக சீமான் மீது பதியப்பட்ட வழக்கை விசாரிக்க, விசாரணை அதிகாரியாக பட்டாபிராம் உதவி ஆணையர் சுரேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


Next Story