நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்; சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை தொடக்கம்


நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்; சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை தொடக்கம்
x

நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை குறித்து முதற்கட்ட விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடங்கினர்.

திருவள்ளூர்

பூந்தமல்லி,

திருவேற்காடு அடுத்த மாதிராவேடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான நர்சிங் கல்லூரியில் படித்து வந்த ஈரோட்டை சேர்ந்த சுமதி (வயது 19), என்ற மாணவி கடந்த வாரம் கல்லூரி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக திருவேற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தலைமையில் 2 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் நேற்று சம்பவம் நடந்த நர்சிங் கல்லூரிக்கு சென்று மாணவி தற்கொலை குறித்து முதற்கட்ட விசாரணையை தொடங்கினர்.

அப்போது, மாணவி தற்கொலை செய்து கொண்ட கல்லூரி விடுதி அறையில் சோதனை மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர். அதுமட்டுமின்றி திருவேற்காடு போலீஸ் நிலையத்தில் இந்த வழக்கு சம்பந்தமாக ஆவணங்களையும் போலீசார் பெற்று சென்றனர். இந்த சம்பவத்தில் மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, நேற்று முதல் ஒரு வாரத்திற்கு கல்லூரிக்கு விடுமுறை அளிப்பதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்ததன் பேரில், விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் அவர்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.


Next Story