ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை உடனே வெளியிட வேண்டும். - ராமதாஸ்


ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை உடனே வெளியிட வேண்டும்.  - ராமதாஸ்
x

இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் இனி தகுதித்தேர்வு அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற கொள்கை முடிவை தமிழக அரசு எடுத்து அறிவிக்க வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது,

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் என அனைத்துப் பணியிடங்களிலும் ஏராளமானவை காலியாக உள்ளன. அவை அனைத்தும் உடனடியாக நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையிலும், சட்டப்பேரவைக்கு வெளியிலும் முதல்-அமைச்சரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் வாக்குறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசுப் பள்ளிகளுக்கு 10,407 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவித்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், அதற்கான கால அட்ட வணையையும் வெளியிட்டது.

ஆனால், அதன்பின் 8 மாதங்களாகியும் இன்னும் ஒரு ஆசிரியர் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் ஆகிய பணிகளுக்கு ஏற்கனவே தகுதித் தேர்வு நடத்தப்பட்டிருக்கும் நிலையில், அதனடிப்படையிலேயே தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து அமர்த்தலாமா? அல்லது போட்டித் தேர்வு நடத்தி அதனடிப்படையில் தேர்வு செய்ய வேண்டுமா? என்பதில் ஏற்பட்டுள்ள குழப்பம் தான் இந்த தாமதத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதில் எந்த குழப்பமோ, ஐயமோ தேவையில்லை. தகுதித் தேர்வின் அடிப்படையிலேயே இந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். தேவையின்றி முந்தைய ஆட்சியில் திணிக்கப்பட்ட போட்டித்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தாலே அனைத்து சிக்கல்களும் தீர்ந்து விடும். அதை செய்ய தமிழக அரசு மறுக்கிறது. போட்டித்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த மே மாதம் 9-ம் நாள் முதல் ஐந்து நாட்களாக சென்னையில் உண்ணாநிலை போராட்டம் நடத்தி, தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் பேச்சு நடத்திய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்த சிக்கலில் அடுத்த ஒரு வாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்தார்.

ஆனால், அதன்பின் 100 நாட்கள் நிறைவடையவிருக்கும் நிலையில் தமிழக அரசு எந்த கொள்கை முடிவும் எடுக்காதது நியாயம் அல்ல. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் இனி தகுதித்தேர்வு அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற கொள்கை முடிவை தமிழக அரசு எடுத்து அறிவிக்க வேண்டும். அதனடிப்படையில் ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை உடனே வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story