வடகிழக்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வரும் 10ம் தேதி ஆய்வுக்கூட்டம் - அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்


வடகிழக்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வரும் 10ம் தேதி ஆய்வுக்கூட்டம் - அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
x

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வரும் 10ம் தேதி ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருப்பதாவது:-

வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், மின்சாரத்துறை சார்பில் எடுக்கப்பட உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வரும் 10ம் தேதி ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அதிகாரிகள் காணொளி காட்சி வாயிலாகவும், சென்னையில் இருப்பவர்கள் நேரடியாக பங்கேற்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், பூமி கம்பிகள், தீயை அணைக்கும் கருவிகள் மற்றும் துணை மின்நிலையங்களில் உள்ள பிற பாதுகாப்பு கருவிகள் தயார் நிலையில் வைத்திருத்தல், அனைத்து மருத்துவமனைகள், முக்கிய அரசு அலுவலகங்கள் கழிவுநீர் உந்தி நிலையங்கள், மேல்நிலை தொட்டிகள் மற்றும் குடிநீர் விநியோகம் ஆகியவற்றுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பது குறித்து பல்வேறு அறிவுரைகள் வழங்கப்படுவதோடு, இறுதிக்கட்டத்தில் இருக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சாரத்துறையில் வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்தார்.


Next Story